பதிவு செய்த நாள்
05
ஜூன்
2014
01:06
கோவை : நிழல் போல், கணவனை தொடர்ந்து இருப்பவளே, சிறந்த மனைவி என, கோதண்டராமர் கோவிலில், நேற்று நடந்த கம்பராமாயண சொற்பொழிவில், திருச்சி கல்யாணராமன் பேசினார். ராம்நகர் கோதண்ட ராமர் கோவிலில் தினமும் மாலை நடக்கும், கம்பராமாயண தொடர் சொற்பொழிவில், நேற்று சீதாகல்யாணம் என்ற தலைப்பில், திருச்சி கல்யாணராமன் பேசியதாவது: விஸ்வாமித்ர மகரிஷி செய்த யாகத்தை, ராம லட்சுமணர்கள் காத்தனர். மிதிலை செல்லும் வழியில் ராமரின் பாதத்துளி பட்டவுடன், கல்லாக இருந்த அகலிகை, பெண்ணாக மாறினாள். ராமன் திருவடி தங்கத்திருவடி என்பதை நிரூபிக்கவே, அகலிகை கல்லாக இருந்தாள் என்று அருணகிரிநாதர் கூறினார். மிதிலை சென்ற ராமன், ஜனகமகாராஜா வைத்திருந்த சிவதனுசை வளைத்தார். அதனால், ஜனகர் தனது மகளான சீதையை, ராமனுக்கு திருமணம் செய்து கொடுத்தார். இவள் என் மகள், உன் நிழலை போல தொடருவாள் என்றார், ஜனகமகாராஜா. நம் நிழல் காலையில் பின்னாலும், உச்சிக்கு உடனும், மாலைப்பொழுதில் முன்னாலும் செல்லும். அதைப்போல, என் மகள் இப்போது, காலை நிழல் போல், அயோதிக்கு உன் பின்னால் வருவாள். நீ கானகம் செல்லும்போது, உச்சி நிழல்போல் உடன் வருவாள். நீ ராமனாக வந்தது, ராவணனை வதம் செய்வதற்கு. நீ இலங்கைக்கு போவதற்கு முன்னால், மாலை நிழல் போல், உனக்கு முன்னால் என் மகள் செல்வாள் என்றார். அதைப்போல, நாம் ஒவ்வொருவரும் இல்லறத்தில், கணவனுக்கு, மனைவி நிழல் போல இருப்பாளேயானால், அந்த மனைவி சிறந்த மனைவியாக கருதப்படுவாள். அந்த குடும்பத்தில் கணவன் - மனைவி இடையே, மன நிம்மதி ஏற்படும்.இவ்வாறு, திருச்சி கல்யாணராமன் பேசினார்.