பதிவு செய்த நாள்
07
ஜூன்
2014
10:06
சேலம்: சேலம், ஜாகீர்ரெட்டிப்பட்டி, காளியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, நேற்று ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள், தீர்த்தக்குடங்களுடன், முளைப்பாரியை ஊர்வலமாக சுமந்து சென்று வழிபாடு நடத்தினர். சேலம், ஜாகீர் ரெட்டிப்பட்டியில், காளியம்மன் கோவில் உள்ளது. கோவிலில், நாளை கும்பாபிஷேக விழா நடக்கிறது. கோவில் கட்டியதற்கு பிறகு நடைபெறும் முதல் கும்பாபிஷேகம் என்பதால், கோலாகலமாக விழாவை நடத்த, அப்பகுதி மக்கள் முடிவு செய்துள்ளனர். கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, கோவிலில் கடந்த சில நாட்களாக சிறப்பு பூஜை நடந்து வருகிறது. நேற்று காலை மாமாங்கம் ஊத்துக்கிணறு பகுதியில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண் பக்தர்கள், தீர்த்தங்குடங்கள், முளைப்பாரி ஆகியவற்றை சுமந்து வந்தனர். செவ்வாடை அணிந்து வந்த பக்தர்களுக்கு முன், ஸ்வாமி யானையின் மீது, கும்பாபிஷேக கலசத்தை எடுத்து சென்றனர். 2 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஜாகீர்ரெட்டிப்பட்டி காளியம்மன் கோவிலை வந்தடைந்த பக்தர்கள், கோவிலில் சிறப்பு பூஜை செய்து வழிபாடு நடத்தினர். முன்னதாக நேற்று காலை யாகசாலை பூஜை உள்ளிட்ட சிறப்பு பூஜை, ஆராதனை நிகழ்ச்சி நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இன்றும் (ஜூன் 7) கோவிலில் சிறப்பு பூஜை, ஆராதனை மற்றும் வழிபாடு நிகழ்ச்சி நடக்கிறது.