பதிவு செய்த நாள்
09
ஜூன்
2014
12:06
சென்னை: தாயன்பை விளக்கும் வகையில், சமர்ப்பணம் நாடகத்தின் அரங்கேற்றம், சென்னை நாரதகான சபாவில் நடக்க உள்ளது. சென்னை, ஆர்.ஏ.புரம் பகுதியை சேர்ந்தவர் பாலசுப்ரமணியன்; பிரபல ஆடிட்டர். அவர் ஜே.பி., கிரியேஷன்ஸ் நிறுவனத்தை துவக்கி, அதன் சார்பில், சமர்ப்பணம் எனும் பெயரில், நாடகம் ஒன்றை தயாரித்துள்ளார். ஆழ்வார்பேட்டை பகுதி, நாரத கான சபாவில், வரும் ௧௩ம் தேதி, மாலை ௬:௩௦ மணிக்கு, அந்த நாடகம் மேடையேற உள்ளது. இதுகுறித்து அவர் கூறியதாவது: இந்த உலகத்தில் உள்ள அனைத்து கடவுள்களுக்கும், பிள்ளை இருக்கிறதா என்பது தெரியாது. ஆனால், எல்லா பிள்ளைகளுக்கும் கடவுள் உண்டு, அம்மாவின் வடிவத்தில், என்று சொல்வர். அந்த கருத்தை மையமாக வைத்து, என் தாயின் நினைவாக, அவரது அன்பை விளக்கும் வகையில், இந்த நாடகத்தை தயாரித்துள்ளேன். முதுமையில் பெற்றோரை அரவணைத்து அன்பு காட்டும் அனைத்து இளைய தலைமுறையினருக்கும், இந்த நாடகம் சமர்ப்பணமாக இருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.