துர்தேவதைகள் கூட சில மந்திரங்களுக்கு கட்டுப்பட்டு அமர்ந்து விடும். அதைக் கட்டுப்படுத்தும் மந்திரங்கள் வேதத்தில் உள்ளன. ஆனால், மனிதன் மட்டும் எதற்கும் கட்டுப்படாதவன் என்கிறார் பராசர மகரிஷி. “உட்கார் என்றால் எழுந்திருப்பான், எழுந்திரு என்றால் உட்காருவான், என்று மனிதனின் மாறுபட்ட மனநிலையை அவர் வெளிப்படுத்துகிறார். உயிர்களுக்கு துன்பம் செய்யாதே’ என்கிறது சாஸ்திரம். ஆனால், இவனோ பிராணிகளில் இருந்து சக மனிதர்கள் வரை துன்பப்படுத்தியே பழகி விட்டான். விஷ்ணுவை குறிப்பிட்ட வகை பூக்களால் அர்ச்சிப்பது நல்லது என்று ஒருஸ்லோகம் சொல்கிறது. இதில் மல்லிகை, ரோஜா என்று ஒரு வார்த்தை கூட வரவில்லை. ‘அகிம்சா பிரதமம் புஷ்பம்’ (அகிம்சையே விஷ்ணுவுக்கு பிடித்த முக்கியமான பூ), என்று துவங்கி, ஐம்புலன்களை அடக்குதல், உயிர்களிடம் அன்பு செலுத்துதல், தியானம், தவம், ஞானம், சத்தியம் ஆகியவையே அந்தப் பூக்கள். இந்த பூக்களைத் துõவி வழிபட்டால், விஷ்ணுவின் அருட்கடாட்சம் நமக்கு எந்தச் செலவுமின்றி கிடைத்து விடும்.