பதிவு செய்த நாள்
10
ஜூன்
2014
12:06
கும்பகோணம்: சூரியனார்கோவிலில், வரும், 13ம் தேதி குருப்பெயர்ச்சி விழா நடத்த ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெறுகிறது. கும்பகோணம் அருகே உள்ள சூரியனார்கோவிலில், திருவாவடுதுறை ஆதீனத்துக்கு சொந்தமான சிவசூரியபெருமான் கோவில் உள்ளது. நவக்கிரகங்களுக்கென்றே அமைந்துள்ள இங்கு உஷாதேவி, சாயாதேவி ஆகிய தேவியர்களுடன் சிவசூரியபெருமான் முதன்மையானவராக அருள்பாலிக்கிறார். இவரது சன்னதி எதிரில், குருபகவான் மற்றும் சன்னதியை சுற்றி மற்ற நவக்கிரகங்கள் தனித்தனி சன்னதிகளில், அவரவர்களுக்குரிய வாகனத்துடன் அருள்பாலிக்கின்றனர். சிறப்புமிக்க இவ்வாலயத்தில், மூலவர் சூரியபெருமானை பார்த்தவாறு குருபகவான் எழுந்தருளி அருள்பாலிக்கிறார். இங்கு குருபெயர்ச்சி விழா விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டு, வரும், 13ம் தேதி குருபகவான் மிதுன ராசியிலிருந்து கடக ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். அதையொட்டி, திருவாவடுதுறை ஆதீனம், 24வது குருமகாசன்னிதானம் அருளாணைப்படி, குருபகவானுக்கு சிறப்பு பரிகார, ஹோம, அபிஷேக, பரிகார அர்ச்சனைகள் செய்யப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை, ஆலய கண்காணிப்பாளர் குருமூர்த்தி மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.