பதிவு செய்த நாள்
12
ஜூன்
2014
03:06
ஈரோடு: வைகாசி விசாகத்தை முன்னிட்டு, திண்டல் வேலாயுத ஸ்வாமி கோவிலில், ஏராளமான பக்தர்கள் ஸ்வாமி தரிசனம் செய்தனர்.வைகாசி, விசாக நட்சத்திரத்தில், முருகன் அவதரித்தார். இந்நாளில் முருகனை தரிசித்து, அபிஷேக ஆராதனைகள் செய்தால், இன்னல்கள் தீர்ந்து, வாழ்வில் இன்பம் பிறக்கும் என்பது ஐதீகம்.வைகாசி விசாகம், ஆண்டுதோறும் தமிழகத்தில் உள்ள முருகன் கோவில்களில், குறிப்பாக மலை கோவில்களில், சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம்.
திண்டல் வேலாயுதஸ்வாமி கோவிலில், நேற்று வைகாசி விசாகம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. அதிகாலையில், கணபதி ஹோமம், லட்சார்சனைகள் துவங்கி நடந்தது.பின் அபிஷேகம், ஆராதனைகள் மற்றும் அன்னதானம் நடந்தது. மாலையில், சுப்பிரமணியர் ஹோமம் நடந்தது. தொடர்ந்து அரசமரத்தடி விநாயகர் கோவிலில் இருந்து, 51 பால் குடங்களுடன் பக்தர்கள் புறப்பட்டனர்.கிரிவலப்பாதையில், பால் குடங்களுடன் ஊர்வலமாக சென்றனர். அதன்பின் அபிஷேகம், தசாம்ச ஹோமம், தீபாராதனைகள் நடந்தது. அதனை தொடர்ந்து, முருகனுக்கு பால் அபிஷேகம், தங்க தேர் பவனி நடந்தது. வைகாசி விசாகத்தை முன்னிட்டு, ஏராளமான பக்தர்கள் கோவிலில் ஸ்வாமி தரிசனம் செய்தனர். இதேபோல் சென்னிமலை, ஊதியூர் முருகன் கோவில்களில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு, முருகனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடந்தன.
*கோபிசெட்டிபாளையம்: ஈரோடு மாவட்டம், பச்சைமலை சுப்பிரமணிய ஸ்வாமி கோவிலில், வைகாசி விசாக விழா, கோலகலமாக நேற்று நடந்தது.நேற்று காலை, ஒன்பது முதல், 11 மணி வரை, 108 லிட்டர் பால் ஊற்றி, தாரா அபிஷேகம் மற்றும் சத்ரு சம்ஹார மஹா அபிஷேகம், பகல், 11 மணிக்கு பால்குட அபிஷேகம், 12 மணிக்கு மகா அபிஷேகம், ஒரு மணிக்கு மகா தீபாராதனை ஆகியவை நடந்தது. இதேபோல் பவளமலை முத்துக்குமாரசாமி கோவிலில், திருக்கல்யாண உற்சவம் மற்றும் சிறப்பு பூஜை நேற்று நடந்தது.