பதிவு செய்த நாள்
18
ஜூன்
2014
10:06
சிதம்பரம்: சிதம்பரத்தில், ஆனித்திருமஞ்சனம் தேரோட்டத்தில் நடராஜர் சுவாமி தேர் இயக்குவதற்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் வலிமை சான்றிதழ் வழங்குவார்களா என சந்தேகம் ஏற்பட்டுள்ளது. பிரசித்தி பெற்ற சிதம்பரம் நடராஜர் சுவாமிகள் கோவிலில் ஆனித் திருமஞ்சனம் மற்றும் மார்கழி ஆருத்ரா தரிசனம் தேரோட்டம் சிறப்பு மிக்கது. இந்தத் தேரோட்டத்தில் மூலவராக இருக்கும் நடராஜர் சுவாமிகள் உற்சவராக எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிப்பது சிறப்பு. நடராஜர் கோவில் 5 தேர்கள், சென்னை பச்சையப்பா டிரஸ்ட் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன் கோவிலுக்கு அர்ப்பணித்து, பராமரித்து வந்தனர். பின்னர் தேர்களை பராமரிக்காமல் விட்டதால் நடராஜர், அம்மன் உள்ளிட்ட தேர்கள் கடந்த 6 ஆண்டுகளுக்கு மேல் பழுதடைந்த நிலையில் உள்ளது. பழுதான தேர்களை கோவில் தீட்சிதர்கள், மேல் அதிகாரிகள் சிபாரிசால், பொதுப்பணித்துறை அதிகாரிகளும் சம்பிரதாயத்திற்கு ஆய்வு செய்து சான்றிதழ் அளித்து பல ஆண்டுகள் தேரோட்டம் நடத்தப்பட்டது.
ஒவ்வொரு தேரோட்டத்தின் போது தேர் சரிந்து விடுமோ என்ற அச்சத்தில் தேரோட்டம் நடந்து முடிகிறது. கடந்த மார்கழி ஆருத்ரா தரிசனம் தே÷ ராட்டத்தின் போது பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடராஜர் தேரை ஆய்வு செய்த போது, மிகவும் பழுதான நிலையில் இருப்பதால் இய க்கக்கூடாது என தேர் ஸ்திறம் (வலிமை) தன்மை சான்றிதழ் வழங்க மறுத்தனர். தேரோட்டம் சம்மந்தமாக 3 முறை சப் கலெக்டர் அரவிந்த் தலைமையில் கூட்டம் நடத்தப்பட்டு தேர் சீரமைப்பு குறித்து விவாதிக்கப்பட்டது. விழா முடிந்ததும் தேர் பணிகளைத் துவக்குவதாக பச்சையப்பா டிரஸ்ட்டினர் உறுதியளித்தனர். தற்காலிகமாக நடராஜர் தேர் பாதுகாப்பு பராமரிப்பு பணிகள் செய்யப்பட்டு, தேர் வீதிகளில் நிறுத்தப்படாமல் இழுத்து சென்று நிலைக்குக் கொண்டு வரவேண்டும் என நிபந்தனையுடன் தேரோட்டம் நடந்தது. வழக்கமாக மாலை 5 மணிக்கு நிலைக்கு வர ÷ வண்டிய நடராஜர் தேர், காலை 11.15 மணிக்கே நிலைக்குக் கொண்டு வந்து நிறுத்தப்பட்டது. இதனால் வெளியூர் பக்தர்கள் தேரோட்டத்தைக் காண முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர். பச்சையப்பா டிரஸ்ட், தீட்சிதர்கள் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் ஆருத்ரா தரிசனம் முடிந்தும் தேர் பணிகள் துவங்கவில்லை.
கடந்த மாதம், சிவகாமி அம்மன் தேர் மட்டும் 50 லட்சம் ரூபாய் மதிப்பில் பணிகள் துவங்கி முடிந்து, இந்த தேரோட்டத்திற்கு புதுத்தேர் இயக்கப் படும் நிலை உள்ளது. ஆனால் நடராஜர் தேர் 75 லட்சம் ரூபாய் மதிப்பில் டெண்டர் விடப்பட்ட நிலையிலேயே உள்ளது. பணிகள் துவக்கப் படவில்லை. இந்த முறை பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடராஜர் தேருக்கு வலிமை தன்மை சான்றிதழ் வழங்குவது சந்தேகமே. வரும் 3ம் தேதி நடக்கவுள்ள ஆனித் திருமஞ்சனம் தேரோட்டத்தின் போது நடராஜர் தேரோட்டம் நடக்குமா என சந்தேகம் எழுந்துள்ளது. புதிய சிவகாமி அம்மன் தேரில் நடராஜர் சுவாமியும், முருகர் தேரில் சிவகாமி அம்மனை ஏற்றி தேரோட்டம் நடத்த என்றால் தீட்சிதர்கள் ஒப்புக்கொள்வது சந்தேகமே. அதனால் ஆனித்திருமஞ்சனம் தேரோட்டத்தில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. வழக்கமான முறையில் தேரோட்டம் நடக்க அனுமதி வழங்கப்பட்டு, அசம்பாவிதங்கள் நடந்துவிட்டால் பழி, பொதுப்பணித்துறை அதிகாரிகளைத் தான் சாரும். எனவே, பொதுப்பணித்துறை அதிகாரிகள் என்ன செய்வது என தெரியாமல் விழிபிதுங்கி நிற்கின்றனர்.