பதிவு செய்த நாள்
19
ஜூன்
2014
12:06
திருத்தணி : திருத்தணி முருகன் கோவிலின், பிரசாத கடை இந்தாண்டிற்கான விற்பனை உரிமம், 1.30 கோடி ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டது. கடந்த ஆண்டை விட, 12.50 லட்சம் ரூபாய் அதிகம். திருத்தணி மலைக்கோவிலில் உள்ள பிரசாத கடையில், சர்க்கரை பொங்கல், புளியோதரை, லட்டு, கற்கண்டு, பேரீச்சம்பழம், விபூதி உட்பட பல்வேறு பொருட்கள் பக்தர்களுக்கு விற்பனை செய்யப்படுகின்றன.இந்த பிரசாத கடையை, ஆண்டுதோறும் கோவில் நிர்வாகம் பொது ஏலம் விடுகிறது. அந்த வகையில் கடந்தாண்டு, பிரசாத கடை, ஒரு கோடியே 17 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டது.இந்த ஆண்டிற்கான ஏலம்,நேற்று காலை, கோவில் தலைமை அலுவலக வளாகத்தில், இணை ஆணையர் புகழேந்தி முன்னிலையில் நடந்தது. இதில் திருச்செந்துார் பகுதியைச் சேர்ந்த ஹரிஹர முத்து மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த ராமன் ஆகியோர் ஏலத்தில் கலந்து கொண்டனர். இதில், ஹரிஹர முத்து, ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுத்தார். இது கடந்த ஆண்டை விட, 12.50 லட்சம் ரூபாய் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.