பதிவு செய்த நாள்
19
ஜூன்
2014
12:06
கோபிசெட்டிபாளையம்: கோபி அருகே மழை வேண்டி தொட்டியன் கோவிலுக்கு, பொங்கல் வைத்து, கிடா வெட்டி, பனை ஓலையில் படையலிட்டு வணங்கினர். தமிழகத்தில், கடந்த மூன்றாண்டுகளாக பருவமழை பெய்யாமல், விவசாயமும், இயற்கை காய்ந்து காணப்படுகிறது. இதனால், மழை வேண்டி ஆங்காங்கு பூஜை நடத்தப்படுகிறது. ஈரோடு மாவட்டம், கோபி அருகே பாண்டியம்பாளையம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட கடுக்காம்பாளையம், கோரக்காட்டூர், வாய்க்கால்மேடு, குஞ்சரமடை, புதுக்குமாராபாளையம், சிட்டாம்பாளையம், சந்திராபுரம் ஆகிய கிராமத்தினர், நேற்று மழைக்காக பூஜை செய்தனர். இப்பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில், 3,500 ஏக்கரில், விவசாய நிலம் உள்ளது. பெரும்பாலும் இப்பகுதியில், கரும்பு, வாழை, சோளம், தென்னை சாகுபடி மேற்கொள்ளப்படுகின்றன. கீழ்பவானி பாசனத்தை நம்பியுள்ள இப்பகுதியினர், கடந்த, இரண்டு ஆண்டுகளாக, மழையின்றி, சிரமப்படுகின்றனர். இப்பகுதியினர் மழை வேண்டி, கிடாவெட்டி நூதன முறையில், படையலிட்டு நேற்று பிரார்த்தனை செய்தனர். பாண்டியம்பாளையம் பகுதியில், ஊருக்கு நடுவில், குட்டைக்காடு பகுதியில் தொட்டியன் கோவில் உள்ளது. இக்கோவில் முன், எட்டு கிராமத்தை சேர்ந்த விவசாயிகள், நேற்று மாலை ஒன்று கூடி, கிடா வெட்டி, பொங்கலிட்டு பனை ஓலையில் உணவு படைத்து, பிரார்த்தனை செய்தனர். பூஜை முடிந்து, பக்தர்களுக்கு பனை ஓலையில், உணவு பரிமாறிய, சில நிமிடங்களில், அப்பகுதியில் அதிசயமாக மழை பெய்தது. இதுபற்றி அப்பகுதியை சேர்ந்த விவசாயி செந்தில்குமார் கூறியதாவது: பல ஆண்டுகளுக்கு முன், தொட்டிய நாயக்கர் சமூகத்தை சேர்ந்த ஒரு வழிப்போக்கர், பசியின் மயக்கத்திலும், தண்ணீரின்றி தாகத்தில், இந்த இடத்தில் உயிரை விட்டார். அன்று முதல் எங்கள் முன்னோர், அவரின் நினைவாகவும், மழை வேண்டி, கிடாவெட்டி, பனை ஓலையில் உணவு படைத்து, பிரார்த்தனை செய்வோம். அதன் பின், ஒரு வார காலத்துக்குள் மழை நிச்சயம் பெய்துள்ளது. இன்று வரை, இதை நாங்கள் தொடர்கிறோம், என்றார்.