பதிவு செய்த நாள்
20
ஜூன்
2014
11:06
கோபிசெட்டிபாளையம்: கோபி அடுத்த பச்சமலை மற்றும் பவளமலை முருகன் கோவில்களில், நேற்று நடந்த குருப்பெயர்ச்சி விழாவில், பரிகார பூஜைக்கு மட்டும், 9,800 டிக்கெட்கள் விற்பனையாகி உள்ளது. குருபகவான் மிதுன ராசியில் இருந்து, கடக ராசிக்கு பிரவேசிப்பதால், கோபி பவளமலை முத்துக்குமாரசாமி கோவிலில், பச்சைமலை முருகன் கோவில்களில் உள்ள, குரு தட்சிணாமூர்த்திக்கு, குரு பெயர்ச்சி விழா, நேற்று ÷ காலாகலமாக நடந்தது. மேஷம், ரிஷபம், கடகம், சிம்மம், துலாம், தனுசு, கும்பம் ஆகிய பரிகார ராசிகாரர்களுக்கு, குருப்பெயர்ச்சி பரிகாரம் செய்து கொள்ள விரும்புவோர், கட்டணம் செலுத்தி, முன்பதிவு செய்து கொண்டனர். பவளமலையில், காலை, ஒன்பது மணிக்கு சிறப்பு பரிகார ஹோமம், 11 மணிக்கு அபிஷேகம், பகல், 12 மணிக்கு குருப்பெயர்ச்சி சிறப்பு பரிகார அர்ச்சனை, 12.30 மணிக்கு மஹா தீபாராதனை நடந்தது. தவிர, பகல், ஒரு மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் நடந்தது. இக்கோவிலில், குருப்பெயர்ச்சி பரிகார பூஜைக்கு, தலா பத்து ரூபாய் கட்டணம் வசூலிக்கப் பட்டதில், மொத்தம், 2,000 டிக்கெட்கள் விற்பனையாகின. இதேபோல், கோபி, பவளமலை முருகன் கோவிலில், குருப்பெயர்ச்சி மற்றும், 108 சங்காபிஷேக விழா நடந்தது. காலை, ஒன்பது முதல், 11 மணி வரை, குருப்பெயர்ச்சி கலச பூஜை, நவக்கிரஹ ஆவாஹனம், சிறப்பு பரிகார ஹோமம், 11 மணிக்கு குரு தட்சிணாமூர்த்திக்கும், நவக்கிரஹ மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேம், மதியம், 12 மணிக்கு குருபகவானுக்கு, 108 சங்காபிஷேகம், 12.30 மணிக்கு குருப்பெயர்ச்சி சிறப்பு பரிகார அர்ச்சனை. 11 மணி முதல் அன்னதானம் நடந்தது. இக்கோவிலில் பரிகார பூஜைக்கு கட்டணமாக, தலா, 20 ரூபாய் வசூலித்ததில், மொத்தம், 7,800 டிக்கெட்கள் விற்பனையாகின.