பதிவு செய்த நாள்
23
ஜூன்
2014
11:06
கோவை : கோனியம்மன் கோவில், ராஜகோபுரத் திருப்பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், கோவில் கும்பாபிஷேக விழா, ஜூலை 11ல் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகள், முழு வீச்சில் நடந்து வருகின்றன. கோவையின் காவல் தெய்வமான’ கோனியம்மனுக்கு ராஜகோபுர திருப்பணிகள், ஏழு ஆண்டுகளாக நடந்து, தற்போது நிறைவடைந்துள்ளன; ஏழு நிலை ராஜகோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. ராஜகோபுரதிருப்பணிக்காக ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது. ராஜகோபுரப் பணிகள் நிறைவடைந்த நிலையில், கோவில் கோபுரத்தின் மேற்குப்பகுதியில், நான்கு அங்காடிக்கடைகள் கட்டப்பட்டு வருகின்றன. இங்கு உப்பு மஞ்சள், மலர் மாலை, தேங்காய் தட்டு ஆகியவை, கோவில் சார்பில் ஏலம் விடப்பட்டு, அங்கு கடை நடத்த உரிமம் வழங்கப்படும்.கோவிலின் கிழக்கு பகுதியிலிருந்த மேல்நிலை தொட்டி, பழைய கட்டடம் இடித்து அப்புறப்படுத்தப்பட்டது. ஜூலை 11ல் குடமுழுக்கு விழா நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக கட்டட, கட்டுமானம், வர்ணம்பூசுதல் உள்ளிட்ட அனைத்துப்பணிகளும் நிறைவடைந்து, விழாவுக்கு தயார் நிலையில் உள்ளது.