பதிவு செய்த நாள்
30
ஜூன்
2014
12:06
சிதம்பரம்: நடராஜர் கோவில் சிவகாமிசுந்தரி அம்மன் தேர் புதுப்பிக்கப்பட்டு திருத்தேர் வெள்ளோட்டம் சிதம்பரத்தில் நேற்று நடந்தது. சிதம்பரம் நடராஜர் கோவில் தேரோட்டம் உற்சவம் ஆனித்திருமஞ்சனம் மற்றும் மார்கழி ஆரூத்ரா உற்சவம் என ஆண்டுக்கு இரு முறை நடக்கிறது. கோவிலு க்கு கடந்த 60 ஆண்டுகளுக்கு முன் சென்னை பச்சையப்பன் அறக்கட்டளை சார்பில் நடராஜர் சுவாமி, சிவகாமி சுந்தரி அம்மன், விநாயகர், முருகர் மற்றும் சண்டிகேஸ்வரர் ஆகிய 5 சுவாமிகள் திருத்தேர்கள் செய்துக்கொடுத்து பராமரித்து வந்தனர். ஆனித்திருமஞ்சனம் உற்சவ தேரோட்டம் வரும் 3ம் தேதி நடக்க இருக்கிறது. கடந்த 2013 மார்கழி ஆரூத்ரா தரிசனம் தேரோட்டத்தின் போது நடராஜர் மற்றும் அம்மன் தேர்கள், தேரோட்டத்திற்கு லாயக்கற்ற நிலையில் இருந்ததால் பொதுப்பணித்துறை அதிகாரிகள் வலிமைத் தன்மை சான்று வழங்க மறுத்தனர். அதிகாரிகள் பேச்சு வார்த்தைக்கு பின்னர் நடராஜர் தேர் தற்காலிக பராமரிப்பு பணி செய்து, தேரோட்டம் நிற்காமல் இழுத்து செல்ல வேண்டும் என்ற நிபந்தனையுடன் தேர் வலிமைத் தன்மை சான்று வழங்கப்பட்டது.
அதனால் நடராஜர் தேரோட்டம் காலை 11.30 மணிக்குள் நிலைக்கு வந்ததால் வெளியூர் பக்தர்கள் தேரோட்டம் பார்க்க முடியாமல் அதிருப்தி அடைந்தனர். இது போன்ற பிரச்னைகள் ஏற்பட்டு வந்ததால் இரு தேர்கள் பழுது நீக்கும் பணியை பச்சையப்பா ட்ரஸ்ட் ஒப்புக்கொண்டது. நடராஜர் சுவாமி தேர் பணி என்ன காரணமோ பணிகள் துவக்கப்படவில்லை. ஆனால் சிவகாமி அம்மன் தேர் 75 லட்ம் ரூபாய் மதிப்பில் புதுப்பிக்கப் பட்டுள்ளது. தேரில் சக்கரம் மற்றும் அச்சைத் தவிர மற்ற அனைத்து பாகங்களும் புதிய மரங்கள் மூலம் பணிகள் செய்து முடிக்கப்பட்டுள்ளது. இந்த பணியை புதுக்கோட்டையை சேர்ந்தவர் தேர் பழுது நீக்கம் பணியை செய்துள்ளனர். புதுப்பிக்கப்பட்ட அம்மன் தேர் வெள்ளோட்டம் நேற்று நடந் தது. இதனையொட்டி புதிய அம்மன் தேருக்கு உற்சவ ஆர்ச்சாரியார் ரத்தினசபாதி தீட்சிதர், கணபதி ஹோமம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் செய்யப் பட்டு, அம்மன் தேருக்கு புனித நீர் ஊற்றி அபிஷேகம் செய்து சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனைகள் நடந்தது. பின்னர் பொக்லைன் மூலம் அம்மன் தேர் இழுக்கப்பட்டு தேர் வெள்ளோட்டம் நடந்தது. இதனை பார்த்த நகர மக்கள் பரவசமடைந்தனர். புதிய தேர் நான்கு ரத வீதிகளில் உலா வந்து நிலைக்கு வந்தது.
நிகழ்ச்சியில் பொது தீட்சிதர்கள் கமிட்டி செயலாளர் பாஸ்கர தீட்சிதர், மணி தீட்சிதர், நடனசபாதி தீட்சிதர், கமிட்டி உறுப்பினர்கள், இந்து ஆலய பாதுகாப்பு குழு நிர்வாகிகள் செங்குட்டுவன், சந்திரசேகரன், குருவாயூரப்பன் மற்றும் தீட்சிதர்கள் குடும்பத்தினர், பக்தர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.