பதிவு செய்த நாள்
03
ஜூலை
2014
03:07
திருவண்ணாமலை: ஜவ்வாது மலையில், மலைவாழ் மக்கள், காளியம்மனுக்கு, 785 ஆடுகள் பலியிட்டு, சிறப்பு பூஜை நடத்தினர். திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாது மலையில் உள்ள நம்மியம்பட்டு கிராமம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதியை சேர்ந்தவர்கள், அங்குள்ள காளியம்மன் கோவிலில், ஆண்டு தோறும், சாதாரணமாக பொங்கலிட்டு விழா நடத்துவது வழக்கம். மேலும், 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை, பெரிய அளவில் திருவிழா நடத்தப்படுவது வழக்கம். சில காரணங்களால், 15 ஆண்டுகளாக, இத்திருவிழா நடைபெறாமல் இருந்து வந்தது. இந்நிலையில், இந்த ஆண்டு திருவிழாவை நடத்துவது என ஊர் மக்கள் பேசி முடிவெடுத்தனர். அதன்படி, கடந்த, 29ம் தேதி, அம்மனுக்கு காப்பு கட்டுதலுடன் விழா தொடங்கியது. காப்பு கட்டிய பிறகு, மூன்று நாட்கள், வெளியூரை சேர்ந்தவர்கள், உறவினர்கள் இங்கு வரக்கூடாது. இதனால், மூன்று நாட்களுக்கு, பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. ஜவ்வாது மலைக்கு செல்லும் பஸ்கள், ஊர் எல்லையிலேயே நிறுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து, மூன்று நாட்களாக, காலையிலிருந்தே ஆயிரக்கணக்கான மக்கள், கோவில் அருகே உள்ள வனப்பகுதியில் பொங்கல் வைத்து காளியம்மனை வழிபட்டனர். பின்னர், மூன்றாம் நாள் விழாவில், 785 ஆடுகள் பலியிடப்பட்டு காளியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. மூன்று நாள் திருவிழா, நேற்று முன்தினம் முடிவடைந்தது.