பதிவு செய்த நாள்
04
ஜூலை
2014
11:07
சென்னிமலை: சென்னிமலை முருகன் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. சென்னிமலை சுப்பிரமணிய ஸ்வாமி கோவிலில் கும்பாபிஷேக துவக்க விழா, கடந்த, மூன்றாம் தேதி நடந்தது. வரும், ஏழாம் தேதி கும்பாபிஷேக விழா நடக்கிறது. அன்று, ஐந்து நிலை ராஜகோபுரம், மூலவர் விமானங்களுக்கு மஹா கும்பாபிஷேகம், காலை, பத்து முதல், 10.30 மணிக்குள் நடக்க உள்ளது. இந்நிகழ்ச்சியின் போது, சென்னிமலை முருகன் கோவில் ராஜகோபுரத்துக்கு ஹெலிகாப்டர் மூலம், பூ துவுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தவிர, அன்று, கோவில் நிர்வாகம் சார்பில், மலை அடிவாரத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இந்நிலையில், கும்பாபிஷேக விழாவின் இரண்டாம் நாள் நிகழ்ச்சியாக, முளைப்பாரி எடுத்து வருதல் நேற்று காலை நடந்தது. முன்னதாக காலை, ஒன்பது மணிக்கு, முருகப்பெருமானுக்கு சிறப்பு யாகமும், புதிய மூர்த்திகளுக்கு அதிவாச கிரியைகள் நடந்தது. மாலை, ஐந்து மணிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. காலை, ஒன்பது மணிக்கு சென்னிமலை, கிழக்கு ராஜ வீதியில் உள்ள கைலாசநாதர் கோவிலில் இருந்து, முளைப்பாரி மற்றும் தீர்த்தம் எடுத்து வரும் நிகழ்ச்சி துவங்கியது. நூற்றுக்கணக்கான பெண்கள், முளைப்பாரி எடுத்து வந்து, மலை மீதுள்ள கோவிலை வந்தடைந்தனர். கேரளா பாரம்பரிய வாத்தியமான, செண்டை மேளம் வாசிக்கப்பட்டது. நிகழ்ச்சியில், மாவட்ட கவுன்சிலர் கோபாலகிருஷ்ணன், சென்னிமலை டவுன் பஞ்., தலைவர் சண்முகசுந்தரம், துணை தலைவர் தெய்வசிகாமணி, மத்திய கூட்டுறவு வங்கி இயக்குனர் சேமலையப்பன், முருகன் அடிமை சுப்புசாமி, விசைத்தறி உரிமையாளர்கள் சங்க செயலாளர் ஈஸ்வரமூர்த்தி, சுவாமி டெக்ஸ் தலைவர் மாரப்பன், உட்பட பலர் பங்கேற்றனர். இன்று, காலை, 6 மணிக்கு மேல், மூலாலய கோபுரம், ராஜகோபுரம் மற்றும் பரிவார மூர்த்தி சன்னதி அனைத்திலும், கோபுர கலசங்கள் வைத்தல், கோபுர சிலைகள் கண் திறப்பு நிகழ்ச்சி நடக்கிறது.பின், ஒன்பது மணிக்கு மேல், மூலவர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு, எந்திரஸ்தாபனம், அஷ்டபந்தனம் சாற்றுதல் நிகழ்வு நடக்கிறது, மாலை, ஐந்து மணிக்கு, சென்னிமலை மலை மேல் உள்ள முருகப்பெருமானுக்கு, முதற்கால யாக வேள்வி துவங்குகிறது. இதில், திருமறை பாராயணம், விநாயகர் பூஜைகள் உள்ளிட்டவை நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் பசவராஜன் தலைமையில், அர்ச்சகர்கள், நான்கு நாட்டுகவுண்டர்கள் செய்து வருகின்றனர்.