பதிவு செய்த நாள்
10
ஜூலை
2014
01:07
இப்பொழுதெல்லாம் கோவில் கும்பாபிஷேகத்தின்போது, ஹெலிகாப்டரிலிருந்து மலர் தூவுவது பேஷனாகி விட்டது. கால் டாக்சி போன்று, கால் ஹெலிகாப்டர் சேவை வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஒரு மணி நேர இயக்கக் கட்டணம் வெறும் 90 ஆயிரம் ரூபாய்தானாம்!கோவில் கும்பாபிஷேக நிகழ்வுகளில், கருடன் வானில் வட்டமிட, கலசங்களில் புனிதநீர் ஊற்றுவது வழக்கம். இத்துடன், பக்தர்கள் மீதும், கோவில் கலசங்கள் மீதும் ஹெலிகாப்டரிலிருந்து மலர் தூவி, வியக்க வைக்கும் அளவுக்கு, விழா ஆடம்பரம் அதிகரித்து வருகிறது.திருப்பூர், சிவன்மலை சுப்ரமணியசாமி கோவில்; ஈரோட்டிலுள்ள சென்னிமலை மற்றும் கொடுமுடி கோவில்களில், சமீபத்தில் நடந்த கும்பாபிஷேகத்தின் போது, ஹெலிகாப்டரிலிருந்து மலர்கள் தூவப்பட்டன. பெங்களூருவிலிருந்து வந்த ஹெலிகாப்டர், காங்கயத்திலுள்ள ஹெலிபேடில் இறங்கியது. இந்த ஹெலிபேட், கடந்த லோக்சபா தேர்தல் பிரசாரத்தின்போது, முதல்வர் ஜெயலலிதாவின் சுற்றுப்பயணத்தின் போது அமைக்கப்பட்டதாகும். காங்கயத்தில் வந்திறங்கிய ஹெலிகாப்டரில், பன்னீரில் நனைக்கப்பட்ட 200 கிலோ ரோஜா இதழ்கள் ஏற்றப்பட்டு, கும்பாபிஷேக கோவில் கோபுர கலசங்கள் மீதும், பக்தர்கள் மீதும் தூவப்பட்டன; பக்தி பரவசத்துடன் பக்தர்கள் மெய்சிலிர்த்தனர்.இந்த ஹெலிகாப்டரை வரவழைக்க சிவன்மலை மற்றும் சென்னிமலை கோவிலுக்கு தலா 3.5 லட்சம் ரூபாயும், கொடுமுடி கோவிலுக்கு லட்சம் ரூபாயும் உபயதாரர்களால் வழங்கப்பட்டுள்ளது.ஹெலிகாப்டரை வாடகைக்கு அமர்த்தும் ஏஜென்சி நடத்தி வரும் கேப்டன் அறிவழகன் கூறியதாவது:தனியார் ஹெலிகாப்டர் சேவை வசதிகள் சென்னை, பெங்களூரு நகரங்களில் உள்ளன. உரியவிதிகளை பின்பற்றி, விமான போக்குவரத்து ஆணையத்திடம் அனுமதி பெற்று, ஹெலிகாப்டர்கள் இயக்கப்படுகின்றன.மலர் தூவும்போது பைலட், இன்ஜினியருடன், விமான போக்குவரத்து ஆணைய அலுவலர் ஒருவரும் உடன் வருவார். கலெக்டரிடமும் முன் அனுமதி பெறப்படுகிறது. மலர் தூவ, ஒரு இன்ஜின் பொருத்தப்பட்ட ஹெலிகாப்டரும், ஆட்கள் பயணிக்க இரு இன்ஜின் ஹெலிகாப்டர்களும் பயன்படுத்தப்படுகின்றன.விமான போக்குவரத்து ஆணையர் மூலம், எங்களை போன்ற ஏஜென்சிகளுக்கு உரிமம் வழங்கப்படுகிறது. ஹெலிகாப்டர் இயக்க மணிக்கு 90 ஆயிரம் முதல் 1.5 லட்சம் ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கோவில் கும்பாபிஷேகம் தவிர, திருமணம் மற்றும் பிற வரவேற்பு நிகழ்ச்சிகளுக்கும் ஹெலிகாப்டர்கள் அழைக்கப்படுகின்றன. இவற்றின் பயன்பாடு பெங்களூரு, மும்பை பகுதிகளில் அதிகம்; தற்போது, தமிழகத்திலும் அதிகரித்து வருகிறது. இவ்வாறு, அறிவழகன் தெரிவித்தார்.