தமிழ்க் கடவுளான முருகப்பெருமானின் புகழ் பாடியவர் அருணகிரிநாதர். முருகனின் பெருமை ஒன்றே புகழ்மிக்கது என்னும் பொருள்பட தனது நூலுக்கு திருப்புகழ் என்று பெயரிட்டார். திருப்புகழைப் பாடினால் வாய்மணக்கும் என்பர். அருள் மணக்கும் திருப்புகழ் மட்டுமில்லாமல் கந்தர் அனுபூதி, கந்தர் அலங்காரம் போன்ற நூல்களையும் அருணகிரியார் பாடியுள்ளார். முருகனின் வரலாற்றை விளக்கும் நூலான கந்த புராணத்தை கச்சியப்ப சிவாச்சாரியார் எழுதியுள்ளார். திருச்செந்தூர் முருகன் அருளால் ஊமையாய் இருந்த குமரகுருபரர் பாடிய நூல் கந்தர் கலிவெண்பாவாகும். சங்க காலத்தில் அழகுத் தமிழில் முருகனின் ஆறுபடைவீடுகளின் பெருமைகளைப் பாடிய புலவர் நக்கீரர். இவர் எழுதிய நூல் திருமுருகாற்றுப்படை. இந்நூல் பன்னிறு திருமுறைகளில் ஒன்றாகத் திகழ்கிறது.