ஊட்டி : விநாயகர் சதுர்த்தி விழாவிற்காக, ஊட்டி நகரம் மற்றும் ஒன்றிய பகுதிகளில் 151 விநாயகர் சிலைகள் வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா ஆலோசனை கூட்டம் ஊட்டியில் நடந்தது. வரும் ஆகஸ்ட் மாதம் 29ம் தேதி விநாயகர் சதுர்த்தி நடக்க உள்ளதையொட்டி, இந்து முன்னணி சார்பில் ஆலோசனை கூட்டம் கிரீன்பீல்டு விநாயகர் கோவிலில் நடந்தது. கூட்டத்திற்கு விநாயகர் சதுர்த்திக்குழு தலைவர் பட்டாபிராமன் தலைமை வகித்தார். செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, துணை தலைவர் முருகேசன் முன்னிலை வகித்தனர். விநாயகர் சதுர்த்தி குழு ஒருங்கிணைப்பாளர் மற்றும் இந்து முன்னணி நீலகிரி மாவட்ட தலைவர் உட்பட பலர் பேசினர்.ஊட்டி நகரம் மற்றும் ஒன்றியங்களில் 11 அடி முதல் 1 அடி வரை 151 சிலைகள் பிரதிஷ்டை செய்ய முடிவு செய்யப்பட்டது. விநாயகர் சதுர்த்தி விழாக்குழு செயலாளர் ராமஜெயம் பாலா நன்றி கூறினார்.