பதிவு செய்த நாள்
17
ஜூலை
2014
10:07
ஸ்ரீவில்லிபுத்தூர் : “ஆடி அமாவாசை விழாவன்று சதுரகிரி மலை கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் மது, பாலிதீன் பைகள் போன்றவைகளை கொண்டு வருவதை தவிர்க்க வேண்டும்,” என மாவட்ட வன பாதுகாவலர் அசோக்குமார் தெரிவித்தார். விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே சதுரகிரி மலை சுந்தரமகாலிங்கம், சந்தன மகாலிங்கம் கோயிலில் ஆடி அமாவாசை திருவிழவிற்கு, ஜூலை 25, 26 ம் தேதிகளில் பல்வேறு மாநிலங்களிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வர். இக்கோயில் மேற்கு தொடர்ச்சி மலையான ஸ்ரீவில்லிபுத்தூர் சாம்பல் நிற அணில்கள் சரணலாய பகுதியில் அமைந்துள்ளது. இக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் ஏழு கிலோ மீட்டர் மலையின் மேல் நடந்து செல்ல வேண்டியதுள்ளது. இவ்வாறு செல்லும் பக்தர்களால் வன விலங்குகளுக்கும், வனத்திற்கும் எவ்வித பாதிப்பு ஏற்படாதவாறு இருக்கவும், பக்தர்கள் சிரமமின்றி கோயிலுக்கு சென்று வர செய்யப்பட வேண்டியவைகள் குறித்த ஆலோசனை கூட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் மாவட்ட வன பாதுகாவலர் அலுவலகத்தில் நடந்தது. கோயில் செயல் அலுவலர் குருமூர்த்தி, வத்திராயிருப்பு இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன், வனச்சரகர் பால்பாண்டியன் , தீயணைப்பு துறையினர், தொண்டு நிறுவனத்தை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பேசிய மாவட்ட வனப்பாதுகாவலர் அசோக்குமார்,“தற்போது கடும் வறட்சி நிலவுவதால் பக்தர்களுக்கு தேவையான தண்ணீர் வசதி ஏற்படுத்தப்படும். இரவில் வரும் பக்தர்கள் டார்ச் லைட் கொண்டு வர வேண்டும். வனப்பகுதியில் கோயிலை தவிர மற்ற இடங்களில் ஜெனரேட்டர் வைக்க அனுமதியில்லை. வனப்பகுதியில் மது, பீடி, சிகரெட், உட்பட எளிதில் தீப்பற்றும் பொருட்களை கொண்டு வரக்கூடாது. பிளாஸ்டிக் பைகளில் பொருட்கள் கொண்டு வருவதை தவிர்க்க வேண்டும் ,” என்றார்.