பதிவு செய்த நாள்
17
ஜூலை
2014
10:07
காஞ்சிபுரம்: ஐயங்கார்குளம் சஞ்சீவிராயர் கோவில் கோபுரம், மண்டப கூரையில் மரக்கன்றுகள் முளைத்து சிதிலமடைந்து வருகிறது. இதனை சீரமைக்க பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். காஞ்சிபுரம் அடுத்துள்ளது ஐயங்கார்குளம் கிராமம். இப்பகுதியில் விஜயநகர பேரரசு காலத்தில் கட்டிய சஞ்சீவிராயர் கோவில் உள்ளது. இது, காஞ்சி வரதராஜ பெருமாள் கோவில் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த கோவில் கோபுரம், மதில் சுவர், பிற பகுதிகள் மரங்களால் சேதமடைந்துள்ளன. இக்கோவிலை சீரமைக்க அப்பகுதிவாசிகள், பக்தர்கள் சார்பில் பல முறை மனுக்கள் கொடுக்கப்பட்டன. காலம் தான் கடந்தது. இதனை சீரமைக்க நடவடிக்கை இல்லை. தமிழ்நாட்டில் ஆஞ்சநேயருக்கு தனியாக இவ்வளவு பெரிய கோவில் வேறு எங்கும் இல்லை என, கூறப்படுகிறது. கோவிலின் எதிரே 133 ஏக்கர் கொண்ட தாதசமுத்திரம் என்ற குளமும் உள்ளது. இக்கோவிலை சீரமைக்க பக்தர்களிடம் எதிர்பார்ப்பு இருக்கிறது. இதுகுறித்து, கோவில் அலுவலர் ஒருவர் கூறுகையில், ’இந்த கோவிலை சீரமைக்க, 29 லட்சம் ரூபாய் அரசு நிதி ஒதுக்கியுள்ளது. இதில், 25 லட்சம் ரூபாய் தற்போது வழங்கியுள்ளது. இதற்கான பணி அடுத்த மாதத்திற்குள் துவங்கும்’ என்றார்.