பதிவு செய்த நாள்
17
ஜூலை
2014
12:07
மாமல்லபுரம்: மாமல்லபுரம் ஸ்தலசயன பெருமாள் கோவில் வளாக பாதுகாப்பிற்கு, 49.50 லட்சம் ரூபாய் மதிப்பில் தடுப்புக் கம்பி அமைக்க, திட்ட அறிக்கை தயாரித்து, ஆணையரிடம் அளிக்கப்பட்டுள்ளது.
சீர்கேடு: இறைவன் ஸ்தலசயன பெருமாள், புண்டரீக முனிவருக்கு காட்சியளித்த தலமாக, திருக்கடல்மல்லை எனப்படும் மாமல்லபுரம் விளங்குகிறது. இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள இக்கோவில் வளாகம், பல ஆண்டுகளாக சீர்கேடாக உள்ளது. கோவிலை ஒட்டி, அர்ச்சுனன் தபசு மற்றும் கிருஷ்ண மண்டபம் ஆகிய பாரம்பரிய சின்ன வளாகத்தை, தொல்லியல்துறை பராமரித்துவரும் நிலையில், அருகில், கோவில் வளாகம் சீரழிந்து வருகிறது. கோவில் வளாகத்திற்கு சுற்றுச்சுவர் அமைத்தால், அர்ச்சுனன் தபசு சிற்பத்தை, மறைக்கும் என்பதால், சுவர் அமைக்க, தொல்லியல்துறை தடையுள்ளது. இதனால், கோவில் வளாகம், பல ஆண்டுகளாக திறந்தவெளி கழிப்பிடமாக மாறி, பேருந்து நிலைய பயணிகள், பகுதிவாசிகள், சுற்றுலா பயணிகள், பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், அங்கு இயற்கை உபாதை கழிக்கின்றனர். மது அருந்துகின்றனர். வளாகமே, துர்நாற்றத்துடன், சீர்கேடாக உள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் முகம் சுளிக்கின்றனர்.
அறிக்கை: இதுகுறித்து, தினமலர் நாளிதழில், கடந்த 1ம் தேதி, செய்தி வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து, இவ்வளாகத்திற்கு தடுப்புச்சுவர் அமைக்க, நடவடிக்கை எடுக்கும்படி, உயரதிகாரிகள், கோவில் நிர்வாகத்திற்கு உத்தரவிட்டனர். இதையடுத்து, பாரம்பரிய சின்னத்தை மறைக்காத வகையில், தொல்லியல்துறை அனுமதியுடன், 3 அடி உயர அடித்தள சுவர், அதன்மேல் 5 அடி உயர தடுப்புக் கம்பி அமைக்க, கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்காக, 49.50 லட்சம் ரூபாய் மதிப்பில் திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு, ஆணையரிடம், அளிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து, கோவில் தரப்பினர் கூறுகையில், இக்கோவிலுக்கு, மதில் அமைக்க, ஆணையரிடம் மதிப்பீடு அளித்துள்ளோம். அவர், ஆய்வுசெய்து நிதி வழங்கியதும், இப்பணியை துவங்குவோம் என்றனர்.