பதிவு செய்த நாள்
17
ஜூலை
2014
12:07
திருக்கழுக்குன்றம்: தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியால், நெரும்பூர் திருவாலீஸ்வரர் கோவிலை சீரமைக்க, இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் அரசிடம் 70 லட்சம் ரூபாய் நிதி கேட்டு பரிந்துரை கடிதம் அனுப்பியுள்ளனர். திருக்கழுக்குன்றம் அடுத்த, நெரும்பூர் கிராமத்தில் பழமை வாய்ந்த, பிரசித்தி பெற்ற திரிபுரசுந்தரி சமேத திருவாலீஸ்வரர் கோவில், இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. 11ஆம் நுாற்றாண்டில் முதலாம் இராஜேந்திர சோழன் காலத்தில் கட்டப்பட்ட இக்கோவில், பராமரிப்பில்லாமல் சிதிலமடைந்துள்ளது குறித்து, கடந்த மாதம் 26ம் தேதி தினமலர் நாளிதழில், படத்துடன் விரிவான செய்தி வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து, இந்து அறநிலையத்துறை பொறியாளர்கள் கோவிலை ஆய்வு செய்து, கோவிலை புதுப்பிக்க, 70 லட்சம் ரூபாய் மதிப்பில் திட்டம் தயாரித்து, புராதன கோவிலை பழமை மாறாமல் புதுபிக்க, 14வது நிதிக்குழுவிலிருந்து நிதி ஒதுக்க அரசுக்கு பரிந்துரை செய்துள்ளனர்.