பதிவு செய்த நாள்
17
ஜூலை
2014
04:07
வண்ணங்களில் அழுத்தமானது சிவப்பு. ஓவியர்கள் மிக அதிகம் பயன்படுத்தும் நிறம் என்றும் இதற்குச் சிறப்புண்டு. கோவைப்பழம், செம்பருத்தி, கிளியின் மூக்கு, ரத்தம் என்று சிவப்பின் சீரை அடுக்கலாம். புரட்சிக்கான அடையாளமும் இதுதான். எச்சரிக்கையைக் குறிப்பதும், கலவரத்தை உணர்த்துவதும் கூட இதுதான். சிக்னல்களில்கூட சிவப்பு விளக்குதான் நிறுத்தம். அழுத்தமான இந்த சிவப்பு வண்ணத்துக்கு உரியவர் செவ்வாய்.
வசிஷ்டர் வந்த பரத்வாஜர் என்ற முனிவருக்கும் தேவ மங்கை ஒருத்திக்கும் மகனாகப் பிறந்தவர் அங்காரகன். இவர் விநாயகர் அருளால்
நவக்கிரகங்களில் செவ்வாய் எனப் பெயர் பெற்றார் எனவும் கூறுவர். மச்ச புராணத்தில் செவ்வாய் பற்றிய ஒரு கதை உண்டு.
தம்மை மதிக்காமல், தட்சன் செய்த வேள்வியை அழிக்க வீரபத்திரரை ஏவினார் சிவபிரான் என்பது பலரும் அறிந்த புராணம். வீரபத்திரர் வரும் போது சுக்ராச்சாரியார் அவரைப் பணிந்து வணங்கி தமக்கு உயிர்ப்பிச்சை கேட்க, வீரபத்திரரும் அவரை மட்டும் விட்டுவிட்டு மற்ற எல்லோரையும் அழித்துவிட்டார். அதைக் கண்ட தேவர்கள், சிவனிடம் முறையிட்டனர். பிறகு சிவபெருமானும், தேவர்களும் ஒன்றுகூடி வீரபத்திரரை சாந்தப்படுத்தினார்கள். சாந்தம் அடைந்த அவர், தேவர்களின் விருப்பை ஏற்று செவ்வாய் பகவானாக இயங்கத் தொடங்கினார் என்கிறது மச்ச புராணம்.
செவ்வாயின் அதிதேவதை சுப்ரமண்யர், பிரத்யதி தேவதை க்ஷேத்ரபாலகர் என்கிற பைரவர். இவரது வேறு பெயர்கள் செவ்வாய், அங்காரகன், குஜன், பூமி புத்திரன் என்பதால் பவுமன். ஜோதிடப்படி மேஷம், விருச்சிகம் ராசிகளுக்கு அதிபதி. நட்சத்திரங்கள்: மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம், சனி, புதன், சுக்ரன் பகைவர்கள். தனுசு, மீனம், கடகம், சிம்மம் லக்னங்களில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் மிகுந்த சுபக்கிரகமாகி பல நன்மைகளை வாரி வழங்குவார்.
சித்தர் அருளியது..
சித்திரை மாதம் முதல் செவ்வாய்க்கிழமை வீரபத்திர மூர்த்திக்கு சிவப்பு நிற மலர்மாலை சூட்டி, சர்க்கரை பொங்கல் நிவேதிக்க வேண்டும். பொங்கலில் அதிகமாக நெய், இனிப்பு, முந்திரி, திராட்சை சேர்த்து, இரண்டு நெய் தீபம் ஏற்றி, வெற்றிலை, பாக்கு, ஒரு எலுமிச்சம் பழம், 1 ரூபாய் காணிக்கை வைத்து வீரபத்திரர் பெயருக்கும் ஜன்ம நட்சத்திரம், ராசி, பெயர் கூறி பரிகாரம் செய்பவரின் பெயருக்கும் அர்ச்சனை செய்து வழிபட வேண்டும். வீரபத்திரருக்கும் நீல நிற (அதில் மஞ்சிற நிற பார்டர் இருந்தால் மிக நன்று) வஸ்திரத்தை அணிவிக்கவும். இவ்வாறு செய்தால் செவ்வாயின் அருளைப் பெறலாம். மேலும் பூமி சம்பந்தமான, பிரச்சனைகளும் தீரும். வீடு, மனைகள் விற்கவும், வாங்கவும் அனுகூலம் உண்டாகும். கடன் பிரச்னைகளும் தீரும்.