பெ.நா.பாளையம் : மேட்டுப்பாளையம்ரோடு வீரபாண்டி பிரிவு அருகே பயனீர் நகர் உள்ளது. இங்கு வெற்றி விநாயகர் கோவில் புதியதாக கட்டப்பட்டுள்ளது. இதில் தட்சிணாமூர்த்தி, ஆதிநாராயணன், துர்க்கை, தென்முகபரமன், கன்னிமூலகணபதி, நவகிரகங்கள் உள்ளிட்ட கோவில்கள் நிர்மாணம் செய்யப்பட்டுள்ளன. கோவில் கும்பாபிஷேக விழா, கடந்த 14ம் தேதி விநாயகர் பூஜையுடன் துவங்கியது. விழாவையொட்டி புனிதநீர் அடங்கிய திருக்குடங்கள் கோவிலை சுற்றி ஊர்வலமாக எடுத்து வரப்பட்டன. பின், சிவானந்தா தவக்குடில் ராஜூ அடிகள் முன்னிலையில் புலவர் சென்னியப்பனார் தலைமையில் சிவாச்சாரியர்கள் விமான கலசத்தின் மீது புனித நீரை ஊற்றி, கும்பாபிஷேகத்தை நடத்தினர். தொடர்ந்து, பரிவார மூர்த்திகளுக்கு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சி தலைவர் அருண்குமார், வீரபாண்டி பேரூராட்சி தலைவர் ஜெயராமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.