பதிவு செய்த நாள்
21
ஜூலை
2014
12:07
உத்திரமேரூர் : திருமுக்கூடல் கிராமத்தில் கெங்கையம்மன் கோவிலுக்கு கூழ்வார்த்தல் திருவிழா நேற்று கோலாகலமாக நடந்தது.திருமுக்கூடலில் உள்ள கெங்கையம்மன் கோவிலில், ஆடி மாதம் கூழ்வார்த்தல் விழாவையொட்டி, கடந்த 17ம் தேதி வெள்ளிக்கிழமை காப்பு கட்டி விழா துவங்கியது. சனிக்கிழமை காலை கிராமத்தில் உள்ள, துர்கையம்மன், செல்லியம்மன், மாரியம்மன் ஆகிய கோவில்களுக்கு அபிஷேகம் நடந்தது. நேற்று காலை 10:00 மணிக்கு, மலரால் அலங்கரிக்கப்பட்டு அம்மன் அப்பகுதி வீதிகளில் ஊர்வலமாக வந்தார். அப்போது, கெங்கையம்மனுக்கு தீபம் ஏற்றி மக்கள் வழிபட்டனர். பிறகு, பிற்பகல் 2:00 மணிக்கு கெங்கையம்மனுக்கு ஆலயத்தில் கூழ்வார்த்தல் விழா நடைபெற்றது. இதே போன்று, உத்திரமேரூர் அடுத்த, கட்டியாம்பந்தல் கிராமத்தில் உள்ள, மாரியம்மன் கோவிலிலும் நேற்று கூழ்வார்த்தல் விழா நடந்தது. காலை 11:00 மணிக்கு, மலர் அலங்காரத்தில் எழுந்தருளி அம்மன் வீதி ஊர்வலம் வந்தார். அதனை தொடர்ந்து, பிற்பகல் 2:00 மணிக்கு, கூழ்வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது. இவ்விழாவில் கட்டியாம்பந்தல் மற்றும் அதனை சுற்றிலும் உள்ள பக்தர்கள் கலந்து கொண்டனர்.