திருவிழா நாட்களில் நடமாடும் கழிப்பறை: பக்தர்கள் எதிர்பார்ப்பு!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23ஜூலை 2014 12:07
ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, திருவிழா நாட்கள் முழுவதும் நடமாடும் கழிப்பறை வசதி ஏற்படுத்த வேண்டுமென, பக்தர்கள் விரும்புகின்றனர். ஸ்ரீவில்லிபுத்தூரில் கடந்த சில ஆண்டுகளாக மழை பெய்யாததால் நிலத்தடிநீர் வற்றி, போர்வெல்களில் தண்ணீர் இல்லாத நிலை உள்ளது. ஆண்டாள் கோயில் திருவிழா நேற்று முதல் துவங்கி நடந்து வருகிறது. பக்தர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. பக்தர்களுக்கு கழிப்பிட வசதி போதியளவு இல்லாததால் சிரமத்திற்குள்ளாக நேரிடுகிறது. கோயில் நிர்வாகம் சார்பில் தேரடி அருகே , கோயில் வடக்கு மாட வீதியிலும் கழிப்பறைகள் செயல்பாட்டில் உள்ளன. தற்போது நிலத்தடி நீர் இல்லாததால் இக்கழிப்பறைகள் தண்ணீர் பிரச்னையில் சில நேரங்களில் செயல்பட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு விடுகிறது. நகராட்சி சார்பில் தேரோட்டத்தன்று மட்டும் நடமாடும் கழிப்பறை வசதிகள், ஆண்டு தோறும் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் தற்போது அதிகளவில் பக்தர்கள் வந்து செல்வதால் ,அவர்களின் வசதிக்காக திருவிழா நாட்கள் முழுவதும் நான்கு ரதவீதிகளிலும், நடமாடும் கழிப்பறை வாகனத்தை இயக்க வேண்டும். இதனால் நகரின் ரதவீதிகள் கழிப்பறையாக மாற்றப்படுவது தடுக்கப்படுவதோடு, சுகாதாரமும் பேணப்படும்.