பதிவு செய்த நாள்
23
ஜூலை
2014
12:07
கும்பகோணம்: ஸ்வாமிமலை முருகன் கோவிலில், ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு சிறப்பு அபிஷேக, ஆராதனை மற்றும் வழிபாடு நடந்தது. ஏராளமான பக்தர்கள், ஸ்வாமிநாத ஸ்வாமிக்கு அர்ச்சனை செய்து வழிபட்டனர். முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில், நான்காவது படை வீடாகவும், தந்தையாகிய சிவபெருமானுக்கு பிரணவ மந்திரத்தை உபதேசம் செய்த தலம் என்பதால், குருஉபதேச தலம் என்ற சிறப்புகளை ஸ்வாமிமலை ஸ்வாமிநாத ஸ்வாமி கோவில் பெற்றுள்ளது. இக்கோவிலில், ஒவ்வொரு ஆண்டும் ஆடிக்கிருத்திகை விழா சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டு ஆடிக்கிருத்திகை விழாவை முன்னிட்டு, அதிகாலையில் விஸ்வரூப தரிசனம் நடந்தது. தொடர்ந்து, மூலவர் ஸ்வாமிநாத ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. பின், ஸ்வாமிக்கு தங்கக்கவசம், வைரவேல், வைரகிரீடம் போன்றவற்றை அணிவித்து, ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இவ்விழாவை முன்னிட்டு உற்சவ மூர்த்தியான சண்முக ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் ஆகியவை செய்யப்பட்டது. ஏராளமான பக்தர்கள், அதி காலையிலேயே புனித நீராடி, சுவாமிநாத ஸ்வாமியை வழிபட்டனர். விழா ஏற்பாடுகளை, கோவில் இணை ஆணையர் மற்றும் தக்கார் ஜெகன்னாதன், துணை ஆணையர் அசோக்குமார் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்தனர்.