பதிவு செய்த நாள்
23
ஜூலை
2014
12:07
திருத்தணி : திருத்தணி முருகன் கோவிலில், நேற்று நடந்த இரண்டாம் நாள் தெப்பத் திருவிழாவில், 75 ஆயிரம் பக்தர்கள் கலந்து கொண்டு, முருகப்பெருமானை வழிபட்டனர். திருத்தணி, முருகன் கோவிலில், நேற்று, இரண்டாம் நாள், தெப்பத்திருவிழா நடந்தது. விழாவை முன்னிட்டு, அதிகாலை, 5:00 மணிக்கு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, தங்க கீரிடம், தங்கவேல், பச்சைமாணிக்க மரகதகல் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடந்தது. நேற்று, மதியம் வரை, கிருத்திகை இருந்ததால், ஆந்திரா மற்றும் தமிழகத்தில் இருந்து, 20 ஆயிரம் பேர் காவடிகள் எடுத்து வந்து தரிசனம் செய்தனர். மாலை, 6:30 மணிக்கு உற்சவர் முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் மலைப்படிகள் வழியாக சரவணப்பொய்கையில் உள்ள தெப்பத்தில் எழுந்தருளினார். பின்னர் சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. தெப்பத்தில் உற்சவ பெருமான், ஐந்து முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரண்டாம் நாள் தெப்பத்தில், மொத்தத்தில், 75 ஆயிரம் பக்தர்கள் தரிசித்தனர்.