பதிவு செய்த நாள்
23
ஜூலை
2014
12:07
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் உண்டியலில், 36,50,462 ரூபாயும்; 245 கிராம் தங்கமும்; 564 கிராம் வெள்ளியும் காணிக்கையாக கிடைத்தது. காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்று விளங்கும் காமாட்சி அம்மன் கோவிலில், இரண்டு உண்டியல்கள் உள்ளன. கோவிலுக்கு வரும் பக்தர்கள் பணம், தங்கம், வெள்ளி இவற்றை காணிக்கையாக செலுத்துவர். இக்கோவிலில், இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை, உண்டியல் திறக்கப்படுவது வழக்கம். இந்து அறநிலைய துறை உதவி ஆணையர் மோகனசுந்தரம் தலைமையில், கோவில் செயல் அலுவலர் தியாகராஜன், ஆய்வாளர் பார்வதி ஆகியோர் மேற்பார்வையில், நேற்று காலை 10:00 மணிக்கு, உண்டியல் திறக்கப்பட்டது. தொடர்ந்து, நவராத்திரி மண்டபத்தில் வைத்து காணிக்கை எண்ணப்பட்டது. 80 பக்தைகள் உட்பட, 100 பேர், எண்ணும் பணியில் ஈடுபட்டனர். இதில் பணம், 36,50,462 ரூபாயும்; 245 கிராம் தங்கமும்; 564 கிராம் வெள்ளியும் காணிக்கையாக கிடைத்தது.