தேவதானப்பட்டி : வரதராஜ்நகர் அருகே உள்ள கன்னிமார்கோயில் ஊரணி கரை மற்றும் தடுப்பு சுவரின் அடிப்பாகம் சேதமடைந்துள்ளதால் மழைக் காலங்களில் நீர் தேக்கி வைக்க முடியவில்லை. பெரியகுளம் தாலுகா, வரதராஜ்நகர் அருகே குள்ளப்புரம் கன்னிமார் கோயில் ஊரணி உள்ளது. ஊரணியின் மேற்கு பகுதியில் பெய்யும் மழைநீர் இங்கு தேங்குறது. இந்த ஊரணியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் வேளாண்மை பொறியியல் துறை சார்பில் தடுப்பு சுவர் கட்டப்பட்டது. ஊரணியில் தேங்கிய மழை நீர் இப்பகுதியின் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தி வந்தது. விவசாய கிணறுகளுக்கு நீரூற்று கிடைத்தது. ஊரணியை மையப்படுத்தி 200 ஏக்கரில் விவசாயப் பணிகள் நடந்தது. கடந்த மூன்றாண்டுகளுக்கு முன் ஊரணியின் வடக்கு கரையில் அரிப்பு ஏற்பட்டது. மேலும் தடுப்பு சுவரின் அடிப்பாகம் சேதமடைந்து ஓட்டை விழுந்தது. மழைக்காலங்களில் வரும் நீர் ஓட்டை வழியாக வெளியேறியது. ஊரணியில் தண்ணீரை தேக்கி வைக்க முடியவில்லை. தொடர்ந்து வறட்சி நிலவுவதாலும் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விட்டது. விவசாய கிணறுகளும் வறண்டு விட்டன. விளை நிலங்கள் வானம் பார்த்த பூமியாக மாறிவருகிறது. இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு தேசிய ஊரக வேலை உறுதித்திட்ட பயனாளிகள் இந்த ஊரணியை தூர்வாரினர். மழை நீர் சேமிப்பு திட்டத்தை வலியுறுத்தும் மாவட்ட நிர்வாகம் இந்த கன்னிமார் கோயில் ஊரணியின் கரை மற்றும் தடுப்பு சுவரின் அடிப்பாகத்தை சரி செய்து மழைநீரை சேமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.