மேட்டுப்பாளையம் : ஆடிப்பூரம் விழாவை முன்னிட்டு, அம்மனுக்கு பெண்கள் சீர்வரிசை படைத்து வழிபட்டனர். மேட்டுப்பாளையம் பங்களாமேட்டில் ராமலிங்கசவுடேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. ஆடி மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமைகளில் அம்மன் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்கார பூஜையும் செய்யப்படுவது வழக்கம். ஆடிப்பூரம் விழாவை முன்னிட்டு, அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. தொடர்ந்து, 200க்கும் மேற்பட்ட பெண்கள் சீர்வரிசைதட்டுகளுடன் நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்து வந்து, அம்மனுக்கு படைத்தனர். தலைமை பூசாரி அமிர்தலிங்கம் பூஜை செய்தார். அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். விழாவில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று அம்மன் சுவாமியை வழிபட்டனர். விழா ஏற்பாடுகளை, கோவில் தலைவர் ஆறுமுகம், செயலாளர் சம்பத்குமார் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.