ஆனைமலை : ஆனைமலை மாசாணியம்மன் கோயிலில் நேற்று ஆடிப்பெருக்கு திருவிழாவை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. தலை ஆடி கொண்டாடும் புதுமண தம்பதிகள் நூற்றுக்கணக்கில் கோவிலில் குவிந்தனர். ஆனைமலையில் உள்ள மாசாணியம்மன் கோவிலுக்கு, ஆடிப்பெருக்கை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்தனர். அம்மனுக்கும், மாசாணியம்மனின் உற்சவர் சிலைக்கும் நேற்று சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தன.பேச்சியம்மனுக்கு பெண்கள் வளையல்கள் மற்றும் தொட்டில்களை காணிக்கையாக செலுத்தினர். பக்தர்கள் கூட்டம் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு வரிசையில் நின்று அம்மனை வழிபட்டனர். மேலும் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானம் நடந்தது.