பதிவு செய்த நாள்
04
ஆக
2014
12:08
பழநி : ஆடிப்பெருக்கை முன்னிட்டு, பழநி பெரியாவுடையார் கோயில் சண்முகநதியில், சப்தகன்னிகள், அஸ்திரதேவர் சிறப்பு பூஜைகள் நடந்தது.பழநி கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தது. விடுமுறை தினம் என்பதால், மலைக்கோயில் தண்டாயுதபாணி சுவாமி, திருஆவினன்குடி குழந்தைவேலாயுதசுவாமி, பெரியநாயகியம்மன், பெரியாவுடையார் கோயில்களில் ஏராளமான பக்தர்கள் வெகுநேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.சுந்தரமூர்த்தி நாயனார் திருநட்சத்திரத்தை முன்னிட்டு, முத்துகுமாரசுவாமி உற்சவர் மண்டபத்தில் சிறப்புயாகபூஜைகள் செய்து, சுந்தரமூர்த்தி நாயனார் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.பெரியநாயகியம்மன் கோயிலிலிருந்து பெரியாவுடையார் கோயிலுக்கு, உமாமகேஸ்வரர், உமாமகேஸ்வரி, விநாயகர், சண்டிகேஸ்வரர் சுவாமிகள் புறப்பாடு நடந்தது. மூலவருக்கு 16 வகை அபிஷேகங்கள் நடந்தது. கோயிலின் முன்உள்ள சண்முகநதி ஆற்றில், சப்தகன்னிகள், அஸ்திர தேவருக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. ஏராளமான பக்தர் பங்கேற்றனர்.