பதிவு செய்த நாள்
05
ஆக
2014
12:08
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் அடுத்த, கூரம் பகுதி சாமாத்தம்மன் கோவில் ஆடி திருவிழா, கோலாகலமாக நடந்து வருகிறது. பல்வேறு கிராமத்திலிருந்தும் பக்தர்கள் வந்து வழிபடுவார்கள்.கூரம் கிராமத்து காவல் தெய்வமாக விளங்கும் சாமாத்தம்மன் கோவில் ஆயிரம் ஆண்டுகள் காலத்திற்கு முற்பட்ட கோவில். ஆண்டுதோறும் ஆடிமாதம் நடக்கும் திருவிழாவின் போது முட்டவாக்கம், சிறுணை, வதியூர், ஆரியப்பெரும்பாக்கம், சென்னை பகுதி பக்தர்கள், கலந்து கொள்வது வழக்கம்.மூன்று நாள் நடக்கும் திருவிழாவின் போது, முதல் நாளான நேற்று முன்தினம் அம்மனுக்கு கிராமத்து பெண்கள் பொங்கலிட்டு வழிபட்டனர். நேற்று காலை கரகம் எடுத்து கன்னியம்மன் கோவிலிருந்து மாரியம்மன் கோவில், சாமாத்தம்மன் கோவிலுக்கு கொண்டு வந்து தெருக்களில் வலம் வந்தனர்.இதை தவிர, அந்த கிராமத்து மக்கள் வளர்க்கும் மாடு களுக்கும் நோய் நொடி வராமல் இருக்க வேப்பம் சேலை கட்டி தெருக்களில் ஊர்வலம் வந்து கோவிலில் ஆராதனை முடிந்த பின் அவரவர் வீட்டுக்கு கொண்டு சென்றனர்.மூன்றாம் நாள் திருவிழாவான இன்று, பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்த, அலகு குத்தி ஊர்வலம் செல்வர். இதனால் வேண்டிய வரமும் செல்வமும் பெருகும் என்பது அப்பகுதி மக்களின் நம்பிக்கை. இன்று இரவு அம்மன் அலங்கரிக்கப்பட்டு வீதியுலா செல்லும். இரவு முழுவதும் கலை நிகழ்ச்சி நடக்கும். இந்த நிகழ்ச்சியை ஊர் பொது மக்கள் மற்றும் ஊராட்சி ஒன்றிய துணை தலைவர் விஸ்வநாதன் ஆகியோர் ஏற்பாடு செய்துள்ளனர்.