பதிவு செய்த நாள்
05
ஆக
2014
12:08
ஈரோடு: ஈரோடு, கோட்டை ஈஸ்வரன் கோவிலில், 63 மூவர் விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, நேற்று சிறப்பு அபிஷேகம் நடந்தது. ஈரோடு, அருள் நெறி திருக்கூட்டம் சார்பில், 69வது திருமுறை மாநாடு மற்றும், 45வது ஆண்டு, அறுபத்து மூவர் விழா, ஒன்றாம் தேதி கோட்டை, திருத்தொண்டீஸ்வரர் கோவிலில் துவங்கியது. ஒன்றாம் தேதி காலை, திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர் விழா கொண்டாடப்பட்டது. கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. மாலையில் திருவிளக்கு பூஜை நடந்தது. இதில், ஏராளமான பெண்கள், சிவனடியார்கள் பலர் பங்கேற்றனர். இரண்டாம் தேதி மாணிக்க வாசகர் விழா கொண்டாடப்பட்டது. காலை, பத்து மணிக்கு, சுந்தரர் தேவாரம் முற்றோதுதல் நடந்தது. மூன்றாம் தேதி சுந்தரர் விழாவாக, காலையில் குரு பூஜை வழிபாடும், வன்னியம்மைக்கும், வன்னி நாதருக்கும்
சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. நான்காம் நாளான நேற்று, சேக்கிழார் விழாவாக
கொண்டாடப்பட்டது. அதிகாலையில், காவிரியில் இருந்து தீர்த்தம் கொண்டு வரப்பட்டது. அதன் பின், அனைத்து மூல, பஞ்ச மூர்த்திகளுக்கும், சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடத்தப்பட்டது. தொடர்ந்து அனைத்து உற்சவ மூர்த்திகளுக்கும், அறுபத்து மூவருக்கும் சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்டன. மதியம் பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மாலையில், அறுபத்து மூவர் பல்லக்கில் வீதி உலா சென்றனர். அறுபத்து மூவர் அபிஷேகம், அலங்கார பூஜையில் ஏராளமான பெண்கள் பக்தர்கள் பங்கேற்றனர். வேத மந்திரங்கள் ஓதப்பட்டன. ஏற்பாடுகளை அருள் நெறி திருப்பணி மன்றத்தினர் செய்து இருந்தனர்