பதிவு செய்த நாள்
07
ஆக
2014
01:08
அந்தியூர்: அந்தியூர் அடுத்த புதுப்பாளையத்தில் அமைந்துள்ள குருநாத ஸ்வாமி கோவிலில், கடந்த வாரம் புதன் கிழமை பூச்சாட்டுதலுடன் விழா துவங்கி, நேற்று முதல் வனபூஜை நடக்கிறது. நேற்று காலை, கோவிலில் இருந்து, குருநாதஸ்வாமி, பெருமாள், காமாட்சி ஆகிய, மூன்று தெய்வங்களுக்கும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பூஜைகள் நடந்தது. பின், அலங்கரிக்கப்பட்ட சிறிய தேரில் காலை 11.30 மணியளவில், சுவாமிகள் கோவிலில் இருந்து, மூன்று கி.மீ., தூரத்தில் உள்ள வனத்துக்கு பக்தர்கள் தோள் கொடுத்து தூக்கி சென்றனர். பின், வனத்தில், இரவு, பத்து மணிக்கு முதல் வன பூஜை செய்யப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டு, மீண்டும் இன்று அதிகாலை நான்கு மணி அளவில், தேர் புதுப்பாளையத்தில் உள்ள கோவிலை வந்தடையும். முன்னதாக, தேர் புறப்பட்டவுடன் பக்தர்கள், தேரின் முன்பு படுத்துக்கொண்டனர். தேரை தூக்கிச்செல்பவர்கள், அவர்களை தாண்டிச்சென்றனர். இதுபற்றி பக்தர்கள் கூறியதாவது: வேண்டுதல் வைத்து, நிறைவேறும் போது, நேர்த்திக்கடனை இவ்வாறு செலுத்துவோம். இவ்வாறு செய்வதால், குடும்ப சங்கடங்கள் நீங்கி, நலமுடன் வாழ்க்கை அமையும், என்றனர்.