ஏழுமுறை புனர்பூச நட்சத்திரத்தன்று தரிசிப்பவர்களின் தோஷம் போக்கி மணவாழ்வு அளிக்கும் கோதண்டராமர் சென்னை அருகிலுள்ள பெருமுடிவாக்கத்தில் கோயில் கொண்டிருக்கிறார்.
அயோத்தி மன்னர் தசரதர் பிள்ளை வரம் வேண்டி புத்திரகாமேஷ்டி யாகம் நடத்தினார். யாககுண்டத்தில் கிடைத்த பாயசத்தை அவரது மனைவியரான கோசலை, கைகேயி, சுமித்ரை ஆகியோர் பங்கிட்டு அருந்தினர். அதன் பயனாக கோசலைக்கு ராமரும், கைகேயியிக்கு பரதரும், சுமித்ரைக்கு லட்சுமணர், சத்ருக்கனரும் பிறந்தனர். ராமருக்கு பட்டம் கட்ட நாள் குறித்தார் தசரதர். ஆனால், கைகேயி தன் பிள்ளை பரதனுக்கு பட்டம் சூட்டவும், ராமனை வனவாசம் அனுப்பவும் கணவரிடம் வரம் பெற்றாள். அதன் காரணமாக ராமர் காட்டுக்கு மனைவி சீதை, தம்பி லட்சுமணருடன் புறப்பட்டார். அங்கு, இலங்கை மன்னன் ராவணனால் சீதை சிறையெடுக்கப்பட்டாள். பின் அனுமன் உள்ளிட்டவானரங்களின் உதவியுடன் ராமர், ராவணனை வதம் செய்து சீதையை மீட்டார். மீண்டும் பட்டாபிஷேகத்திற்காக அயோத்தி புறப்பட்ட ராமர், பெருமுடிவாக்கம் என்னும் இத்தலத்தின் வழியாகச் சென்றார். அதன் அடிப்படையில் ராமருக்கு இங்கு கோயில் அமைக்கப்பட்டது. பெருமுடி என்பதற்கு கிரீடம் என்பது பொருள். முற்காலத்தில் இத்தலம் மகுடாபிஷேகம் என வழங்கப்பட்டு வந்தது. 1897ல் ரங்கசாமி அய்யங்காரால் தற்போதுள்ள கோயில் அமைக்கப்பட்டது.