பதிவு செய்த நாள்
08
ஆக
2014
10:08
கும்மிடிப்பூண்டி : சிறுவாபுரி பாலசுப்ரமணிய சுவாமி கோவிலில், வரும் 10ம் தேதி, வள்ளி மணவாள பெருமானுக்கு திருக்கல்யாண மகோற்சவம் நடைபெற உள்ளது. சென்னை - கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில், சென்னையில் இருந்து, 35 கி.மீ., தொலைவில் உள்ள சின்னம்பேடு கிராமத்தில் அமைந்துள்ளது சிறுவாபுரி பாலசுப்ரமணிய சுவாமி கோவில். இங்கு மணக்கோலத்தில் காட்சியளிக்கும் வள்ளி மணவாள பெருமானை வணங்கினால், திருமணம் கைகூடும் என்பது ஐதீகம். திருமண பிரார்த்தனையின் முக்கிய வழிபாடாக, வள்ளி மணவாள பெருமானுக்கு திருக்கல்யாண மகோற்சவம் நடைபெறும். அப்போது, திருமணமாகாத ஆண், பெண்கள், மாலை கொண்டு வந்து சுவாமிக்கு அணிவித்து, அதை பிரசாதமாக பெற்று, அணிந்து சுவாமியின் பின் கோவில் பிரகாரத்திற்குள் வலம் வர வேண்டும். இந்த பிரார்த்தனையில் பங்கேற்பவர்களுக்கு அடுத்த திருமண மகோற்சவத்திற்குள் திருமணம் கைகூடுவதாக ஐதீகம். சென்னையைச் சேர்ந்த அண்ணாமலையார் ஆன்மிக வழிபாட்டு குழுவினர் சார்பில், நாளை மறுநாள், (10ம் தேதி) ஐந்தாம் ஆண்டு, காலை 10:௦௦ மணிக்கு திருக்கல்யாண மகோற்சவம் நடைபெற உள்ளது. மகோற்சவத்தை முன்னிட்டு, காலையில் சிற்றுண்டியும், மதியம் கல்யாண விருந்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தொடர்புடைய கோயில்கள் :