பதிவு செய்த நாள்
11
ஆக
2014
10:08
அழகர்கோவில்: அழகர்கோவில் சுந்தரராஜ பெருமாள் கோயில் ஆடித் தேரோட்டத்தில் கோவிந்தா கோஷம் முழங்க,பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.இக்கோயில் ஆடித்திருவிழா, ஆக.,2ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் காலையில் பல்லக்கிலும், இரவில் பல்வகை வாகனங்களிலும் எழுந்தருளி, பக்தர்களுக்கு பெருமாள் சேவை சாதித்தார். ஆக.,6ல் காலை 7:15 மணிக்கு பல்லக்கில் புறப்பட்ட பெருமாள், சுந்தரராஜன்பட்டி மறவர் மண்டபத்தில் எழுந்தருளினார்.முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடந்தது. காலை 6:00 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவியுடன் சுந்தரராஜ பெருமாள் சர்வ அலங்காரத்துடன் தேரில் எழுந்தருளினார். தீபாராதனை நடந்தது. காலை 8:48 மணிக்கு நாட்டார்கள் வெண்சாமரம் வீசியதும் “கோவிந்தா” கோஷம் முழங்க பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர்.ஆடி, அசைந்து நகர்ந்த தேர் காலை 10:30 க்கு நிலைக்கு வந்தது. இரவு 7:00 மணிக்கு பூப்பல்லக்கில் புறப்பட்ட பெருமாள், தேரோடிய பாதையில் வலம் வந்தார். மதுரை மட்டுமல்லாது பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.அதேபோல் ராஜகோபுரத்தில் உள்ள 18ம் படி கருப்பணசாமிக்கு ஆடி அமாவாசை மற்றும் பவுர்ணமியில் பக்தர்கள் சந்தனக்காப்பு நடத்துவது வழக்கம். மதுரை உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் சந்தனக்குடம் எடுத்து வந்து நேர்த்திக் கடன் செய்தனர்.நள்ளிரவு வரை கருப்பண சுவாமிக்கு சந்தன காப்பு நடந்தது.பக்தர்கள் வசதிக்காக நுாபுரகங்கையில் இருந்து புதிதாக பைப்லைன் அமைத்து தண்ணீர் கொண்டுவரப்பட்டது. ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாஜலம், நிர்வாக அதிகாரி வரதராஜன் தலைமையில் கண்காணிப்பாளர் சிவராஜேந்திரன், பேஷ்கார் சுப்பையன், உதவி பேஷ்கார் புகழேந்தி மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.
தொடர்புடைய கோயில்கள் :