பதிவு செய்த நாள்
13
ஆக
2014
02:08
சென்னை : கோவில்களில், பணிபுரியும் 9,808 தற்காலிக கோவில் பணியாளர்கள், பணி நிரந்தரம் செய்யப்படுவர், என, முதல்வர் ஜெயலலிதா அறிவித்து உள்ளார். சட்டசபையில், நேற்று, 110வது விதியின் கீழ், அவர் வெளியிட்ட அறிவிப்புகள்: கோவில்களில் அன்னதானம் வழங்கும் பணியில் உள்ள, சமையலர், உதவியாளர், துப்புரவாளர் என, 820 பேர் தொகுப்பு ஊதியத்திலும், தினக் கூலியிலும் பணியாற்றுகின்றனர். இவர்களுக்கு, உரிய சம்பள விகிதத்தில், ஊதியம் நிர்ணயிக்கப்படும். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள, 490 கோவில்களில், தினக் கூலி அடிப்படையில் பணியாற்றும் 804 பேருக்கு, ஊதிய விகித முறையில் பணி வரன்முறை செய்யப்படும். மேலும், காலியாக உள்ள, 154 பணியிடங்கள் நிரப்பப்படும். கோவில்களில், தொகுப்பூதிய அடிப்படையில், ஐந்தாண்டுகளுக்கு மேல், 8,184 பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள், ஊதிய விகித அடிப்படையில், வரன்முறை செய்யப்படுவர். இதன்மூலம், ஆண்டுக்கு, 44.14 கோடி ரூபாய், அரசுக்கு கூடுதல் செலவு ஏற்படும். இவ்வாறு, அவர் அறிவித்தார்.