பதிவு செய்த நாள்
13
ஆக
2014
02:08
பார்வையற்ற தகப்பன் தன் குழந்தையின் முத்தத்தில் உணரும் மழலையின் வசீகரத்தில்; வாய் பேச முடியாத தகப்பன் தரும் முத்தத்தில் குழந்தை உணரும் பாச மொழியில்; சாமி தெரியலைப்பா எனச் சொல்லும் குழந்தையை தன் தோளில் ஏற்றும் தகப்பனால், சாமிக்கு கிடைக்கும் குழந்தையின் தரிசனத்தில் எத்தகைய சிலிர்ப்பு இருக்குமோ, அத்தகைய சிலிர்ப்பை தரவல்லது, கம்பனின் சுந்தரகாண்டம்.
அன்று, கம்பன் அரங்கேற்றிய சுந்தர காண்டத்தின் மூலம், சீதை உயிரோடு இருப்பதை அறிந்து மகிழ்ந்தான் ராமன். இன்று, லட்சுமி ராமஸ்வாமி குழுவினர் அரங்கேற்றிய சுந்தரகாண்டம் நாட்டிய நாடகம் மூலம், ராமனோடு சேர்த்து, நாரதகான சபா நிறைத்திருந்த அத்தனை உள்ளங்களும் மகிழ்ந்தன. எப்படி வாழ வேண்டும்? என்பதை சொல்லிக் கொடுப்பது ராமாயணம் என்று, சும்மாவா சொன்னார்கள்? வாழ்க்கையை கற்றுக்கொள்ள வயது வித்தியாச மில்லாமல் வந்திருந்தார்கள் ரசிகர்கள். ஆகஸ்ட் 11, இரவு 7:௦௦ மணிக்கு நிகழ்ச்சி. கடல் தாண்டி, மலை தாண்டி, இலங்கையை நோக்கி அனுமன் செல்கிறான். அவனது கால்படும் மலைகள் அதிர்கின்றன. மலைக்குள் இருக்கும் உயிர்கள், மலையின் அதிர்வில் பிதுங்குகின்றன. செய்வதறியாது, அங்குமிங்கும் தட்டுத் தடுமாறி அலைகின்றன. இதுதான் காட்சி.
மேடையில் எவ்வித அலங்காரங்களும் இல்லை. ஆனால், அனுமனின் அத்தனை சாகசங்களும், அவற்றின் விளைவுகளும் துல்லியமாக நம் கண்முன் விரிகின்றன. அழகு மலர்கள், தங்களின் நளினமான பரதத்தால் இவைகளை காட்சிப்படுத்த, மேடை நிறைகிறது. அரங்கம் அதிர்கிறது.அதிலும், மூன்று இளம் தளிர்கள், தங்களின் பிஞ்சு பாதங்களால் மேடையை கொஞ்ச, அனுமன் இந்த இடத்திலேயே சற்று இளைப்பாறக் கூடாதா என்று, ரசிகர்கள் மனம் கெஞ்சுகிறது. அந்த இளம் தளிர்களின் பரதம் கொள்ளை அழகு!இந்த சுந்தரகாண்டம் நாட்டிய நாடகத்திற்கான பாடல்களை, இசைமேதை பாபனாசம் சிவனின் மகளான, டாக்டர் ருக்மணி ரமணி எழுத, இசை அமைத்திருந்தார் மகாகவி பாரதியாரின் கொள்ளுப்பேரனான டாக்டர் ராஜ்குமார் பாரதி.
இலங்கையில் நுழைந்து, அதன் அழகில் அனுமன் வியந்து கொண்டிருக்கையில், பின்னணியில் ஒலித்த இந்திரலோகமோ...ரத்தினபுரியோ... பாடல், ருக்மணி ரமணியின் தமிழ்ப் புலமையை சொல்லியது. அசோகவனத்தில் அரக்கி கள் போடும் ஆட்டத்திற்கான துள்ளல் இசையில், ராஜ்குமார் பாரதியின், இசைஞானம் கம்பீரமாய் மிளிர்ந்தது.அசோகவனம் - சீதையைப் பார்க்க அனுமனுக்கு மட்டுமல்ல, மொத்த அரங்கத்திற்கும் ஏக்கம் இருந்திருக்கிறது என்பதை, சீதையை கண்ட நொடியில், அரங்கத்தில் எழுந்த ஆரவாரம் உணர்த்தியது. சோகமே வடிவாக, அந்த வடிவமும் அழகாக, ராமனுடன் தான் வாழ்ந்த சந்தோஷமான காலங்களை நினைத்துப் பார்த்து சீதை கலங்கி நிற்கிறாள்.சீதையின் மலரும் நினைவுகள், அவள் பின்னால், மெல்லிய ஒளியில் காட்சிகளா கின்றன. நிகழ்வின் சோகத்தையும், நினைவின் சந்தோஷத்தையும் ஒரே மேடையில் பார்த்து லயிக்கும் ரசிகர்களின் மனம் அமைதியாக, அந்த அமைதி அரங்கத்திலும் பிரதிபலித்தது.
சில நிமிடங்கள்தான்! அந்த அமைதியை கிழிக்கிறது ராவணனின் வருகை. வந்தவன், தன் ஆசைக்கு இணங்குமாறு சொல்லி, சீதையை மிரட்டுகிறான். மசியாத சீதையை, இன்னும் மிரட்டச் சொல்லி, அரக்கிகளுக்கு ஆணையிடுகிறான்.நிலைகுலைந்து போன சீதை, மனம் வெறுத்து, அசோகவன மரக்கிளையில், தன் கூந்தலை துாக்கு கயிறாக்கி உயிர் துறக்க முயல்கிறாள். அனுமன் அங்கே வருகிறான். அன்னையைப் பார்த்து நெகிழ்கிறான். அன்னை தரும் சூடாமணியை பெற்றுக் கொண்டு, ராமனிடம் விரைகிறான்.எதிர்பார்த்து நிற்கும் ராமனிடம், கண்டேன் கற்பினுக்கணியைஎன, சீதை உயிரோடு இருப்பதையும், கற்போடுஇருப்பதையும் ஒருசேரச் சொல்லி, அவனைகுளிர்விக்கிறான்.தன் பயணம் இனிதே முடிந்த திருப்தி, அனுமனிடம்! வாசித்து ருசித்த சுந்தர காண்டத்தை, நாட்டிய வடிவில் பார்த்து ரசித்த திருப்தி ரசிகர்களிடம்!
தில்லானா சப்தத்தை மிஞ்சியது கரவொலி. அந்த கரவொலி...அரங்க வடிவமைப்பே இல்லாமல், நடன அமைப்புகள் மூலம், வளமான இலங்கையையும், செழிப்பான அசோகவனத்தையும், சீதை-ராமன் அன்பையும், அனுமனின் மாண்பையும் அழகுறச் சொன்ன லட்சுமி ராமஸ்வாமிக்கும், அவரது வழிகாட்டுதலை ஏற்று அசத்திய அவரது குழுவினருக்குமான ரசிகர்களின் அளப்பரிய பாராட்டு மொழி!