பதிவு செய்த நாள்
14
ஆக
2014
11:08
சிதம்பரம்: சிதம்பரத்தில் பழுதடைந்த நடராஜர் கோவில் தேர் செய்யும் பணியை பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள நடராஜர் சுவாமி, சிவகாமசுந்தரி அம்மன் உள்ளிட்ட ஐந்து தேர்களை, சென்னை பச்சையப்பா அறக்கட்டளை பராமரித்து வருகிறது. இந்த தேர்கள் கடந்த சில ஆண்டுகளாக பழுதடைந்த நிலையில் இருந்ததால், ஆனித் திருமஞ்சனம், மார்கழி ஆருத்ரா தரிசனம் தேரோட்டத்தின் போது, பொதுப்பணித் துறை அதிகாரிகள் ஸ்திரத்தன்மை சான்று அளிக்க மறுத்தனர். கடந்த 3 தேரோட்டங்கள் உயரதிகாரிகளின் சிபாரிசின் பேரில் பொதுப்பணித் துறை அதிகாரிகள் சான்றளித்து தேரோட்டம் நடந்தது. அதனால், பழுதடைந்த நடராஜர் மற்றும் சிவகாமசுந்தரி தேர்களைப் புதுப்பிக்க வேண்டும் என கோவில் நிர்வாகம் மற்றும் பக்தர்கள் பச்சையப்பா அறக்கட்டளைக்கு கோரிக்கை வைத்ததைத் தொடர்ந்து, அறக்கட்டளைத் தலைவர் ஜெயச்சந்திரன், செயலர் ராஜகோபால் ஆகியோர் இரண்டு தேர்களையும் புதுப்பிக்க சம்மதம் தெரிவித்தனர். அதன் பேரில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் சிவகாமசுந்தரி அம்மன் தேர் 50 லட்சம் ரூபாய் மதிப்பில் புதுப்பிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து நடராஜர் சுவாமி தேரை 93 லட்சம் ரூபாய் மதிப்பில் புதுப்பிக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கடந்த வாரம் பணிகள் துவங்கியது. பழுதடைந்த தேர் முற்றிலுமாக பிரிக்கப்பட்டு, புதிய பர்மா தேக்கு மரம் மூலம் தேர் செய்ய பணிகள் நடக்கிறது.
இதனை கடலூர் பொதுப்பணித் துறை கண்காணிப்பு செயற் பொறியாளர் கலையரசன், நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்த பின் நிருபர்களிடம் கூறுகையில், ‘நடராஜர் தேர் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. பர்மா தேக்கு மரம் மூலம் செய்யப்பட்டதால் உறுதியாக இருந்துள்ளது. அதனால் மீண்டும் பர்மா தேக்கு புதிய மரங்கள் மூலம் புதிய தேராக செய்யப்படும். இந்த தேரின் பீடம் மட்டம் 25 அடி உயரம் கொண்டது. தேரில் இருந்து பிரித்து எடுக்கப்பட்ட சிற்பங்கள் நல்ல நிலையில் உள்ளன. அதனால், இந்த சிற்பங்களை மீண்டும் பயன்படுத்த, கெமிக்கல் மூலம் சுத்தம் செய்யப் படுகிறது. தேர் உறுதித் தன்மையுடன் செய்யப்படும்’ என்றார். சிதம்பரம் பொதுப்பணித் துறை உதவி செயற் பொறியாளர்கள் வைத்தியநாதன், மணிவண்ணன் மற்றும் பொது தீட்சிதர்கள் செயலர் பாஸ்கர தீட்சிதர் உடனிருந்தனர்.
தொடர்புடைய கோயில்கள் :