பதிவு செய்த நாள்
16
ஆக
2014
01:08
திருத்தணி: சுதந்திர தினத்தை ஒட்டி, முருகன் கோவிலில், நேற்று சிறப்பு வழிப்பாடு மற்றும் சமபந்தி விருந்துநடந்தது.நாட்டின், 68வது சுதந்திர தின விழா, நேற்று கொண்டாடப்பட்டது. இதை ஒட்டி திருத்தணி முருகன் கோவிலில், பகல் 12:00 மணிக்கு மூலவர், சண்முகர், ஆபத்சகாய விநாயகர், வள்ளி, தெய்வானை ஆகிய சன்னிதிகளில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.அரசு விடுமுறை என்பதால், நேற்று முருகன் மலைக்கோவிலில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். இதனால், பொது வழியில், நான்கு மணி நேரம் காத்திருந்து மூலவரை தரிசித்தனர்.தொடர்ந்து, மலைக்கோவிலில் உள்ள காவடி மண்டபத்தில், பக்தர்களுக்கு சமபந்தி விருந்து நடந்தது. இதை கோவில் இணை
ஆணையர் புகழேந்தி துவக்கிவைத்தார். பக்தர்களுக்கு அறுசுவை உணவு வழங்கப்பட்டது. இதில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.புறக்கணிப்பு: சுதந்திர தினம், குடியரசு தினம் மற்றும் அண்ணா நினைவு நாள் போன்ற நாட்களில் முருகன் கோவிலில், சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. இதுவரைக்கும் நடந்த நிகழ்ச்சியில், எம்.பி., எம்.எல்.ஏ., வருவாய் துறை அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் முக்கிய அரசியல் பிரமுகர்கள் கலந்து கொள்வார்கள். ஆனால், நேற்று நடந்த நிகழ்ச்சியில் அரசு அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் யாரும் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தனர்.