பதிவு செய்த நாள்
16
ஆக
2014
01:08
ஊத்துக்கோட்டை:ஆடி மாதம் கடைசி வெள்ளிக்கிழமையை ஒட்டி, பெரியபாளையம் பவானியம்மன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.தமிழகத்தில் உள்ள அம்மன் கோவில்களில் பிரசித்தி பெற்றது பெரியபாளையம் பவானியம்மன் கோவில். ஆடி மாதம் துவங்கி, முதல் ஞாயிற்றுக்கிழமை முதல், 14 வாரங்கள் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடக்கும். இதில் தமிழகம், ஆந்திரா, கர்நாடக மாநிலங்களின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் குடும்பத்துடன் இங்கு தங்கி அம்மனை தரிசனம் செய்வர்.இங்கு செவ்வாய், வெள்ளிக்கிழமைகளிலும் அதிகளவு பக்தர்கள் வருவர். நேற்று ஆடி மாதம் கடைசி வெள்ளிக்கிழமை ஆனதால் சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் இருந்து பக்தர்கள்
கார், வேன், லாரி மூலம் பவானியம்மன் கோவிலில் குவிந்தனர். சிலர் குடும்பத்துடன் சனிக்கிழமை இரவு வந்து இங்கு தங்கினர்.பக்தர்கள் தங்க போதுமான இடவசதி இல்லாததால், ஆரணி ஆற்றில் அமைக்கப்பட்ட தற்காலிக குடில்களில் தங்கினர். பக்தர்கள் அதிகளவு கார், வேன், லாரி, பஸ் ஆகியவற்றில் வந்ததால், இப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நேற்று காலை பக்தர்கள் கோவிலுக்குச் சென்று வேப்பிலை ஆடை அணிந்தும், கோழிகளை செலுத்தி தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர். அதிகளவு பக்தர்கள் வருகையால் இங்குள்ள ஓட்டல்களில் மதிய உணவு விரைவில் காலி ஆனதால் பெரும்பாலானோர்,டீக்கடை, குளிர்பானக் கடைகளில் குவிந்தனர்.