பதிவு செய்த நாள்
18
ஆக
2014
01:08
ஆர்.கே.பேட்டை : அம்மன் திருவிழா, ஆடி, ஆவணி, என, 10 வாரங்கள் கொண்டாடப்பட்டு வருகின்றன. அம்மையார்குப்பம் சக்தி மாரியம்மன், நேற்று முன்தினம், புற்றில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பெண்கள், 1,008 தீபம் ஏற்றி வழிபட்டனர். ஐந்து வாரங்களாக கொண்டாடப்பட்டு வரும் அம்மன் திருவிழாவில், அம்மனுக்கு பல்வேறு விதமான அலங்காரம், உற்சவம் நடத்தப்பட்டு வருகிறது. நவதானியம், ரூபாய் நாணயங்கள், வீதியுலாவில் பாலாபிஷேகம் என, வித்தியாசமான அலங்காரங்களை அமைத்து வரும் வங்கனுார், அம்மையார்குப்பம் பக்தர்கள், தற்போது செயற்கையாக பாம்பு புற்று வடிவமைத்து, அதில் சக்தியம்மனை அமர்த்தினர்.அம்மையார்குப்பம் சுப்ரமணிய சுவாமி கோவில் அருகே உள்ளது சக்தி மாரியம்மன் கோவில். நேற்று முன்தினம், இந்த கோவில் வளாகத்தில், களிமண்ணால் பாம்பு புற்று உருவாக்கப்பட்டது. அதில், புற்று மாரியம்மனாக, சக்தி மாரியம்மனை பக்தர்கள் எழுந்தருளச் செய்தனர். அம்மனுக்கு சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டது.ஆடி திருவிழாவிற்காக, தத்ரூபமாக அமைக்கப்பட்ட புற்றை கண்டு பக்தர்கள் ஆச்சரியம் அடைந்தனர். மாலையில், புற்று மாரியம்மனுக்கு, 1,008 குத்துவிளக்கு பூஜை நடந்தது.