பதிவு செய்த நாள்
18
ஆக
2014
01:08
வாழப்பாடி: வாழப்பாடி அருகே, பிரசித்தி பெற்ற பேளூர் தான்தோன்றீஸ்வரர் கோவில் தேரோட்டம், 200 ஆண்டுக்கு பின், வரும் 21ம் தேதி நடக்கிறது. வாழப்பாடி அடுத்த, அருநூற்றுமலையில் உற்பத்தியாகும் புனித நதியாக போற்றப்படும் வசிஷ்ட நதிக்கரையில், புராண வரலாற்று சிறப்பு மிக்க பஞ்சபூத சிவன் திருத்தலங்களில், முதல் தலமான பேளூர் தான்தோன்றீஸ்வரர் கோவில் உள்ளது. 5,000 ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்ததாக கருதப்படும், தான்தோன்றீஸ்வரர் கோவில் மரத்தேர், 200 ஆண்டுக்கு முன் சிதிலமடைந்ததாக கூறப்படுகிறது. அதனால் தேரோட்டம் நடக்கவில்லை. இதையடுத்து, 2010ம் ஆண்டு, 25 லட்சம் ரூபாய் செலவில் சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய பிரம்மாண்டமான மரத்தேர் அமைக்கப்பட்டு, வெள்ளோட்டம் விடப்பட்டது. அதன் பிறகு பொதுமக்கள் மற்றும் பக்தர்களின் வேண்டுகோளின் பேரில், இந்தாண்டு தேரோட்டம் நடத்திட இந்துசமய அறநிலையத்துறை முடிவு செய்துள்ளது. நேற்று தேர்த்திருவிழா கொடியேற்றமும், யாகசாலை வழிபாடும், ஸ்வாமி திருவீதி உலாவும் நடந்தது. இன்று அம்மன் சிம்ம வாகனத்திலும், நாளை நாக வாகனத்திலும் திருவீதி உலா வருகிறார். வரும், 20ம் தேதி சிறப்பு அபிஷேக ஆராதனைகள், ஸ்வாமிக்கு கல்யாண வைபோவமும், ரிஷப வாகன பஞ்சமூர்த்தி புறப்பாடு நிகழ்வும் நடக்கிறது. 21ம் தேதி காலை 11.30 மணிக்கு தான்தோன்றீஸ்வரர் தேரோட்டம் வெகுவிமரிசையாக நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் ராஜகோபால், தக்கார் ஞானமணி ஆகியோர் செய்து வருகின்றனர்.