பதிவு செய்த நாள்
21
ஆக
2014
01:08
ஆத்தூர்: ஆத்தூர் பெரிய மாரியம்மன், செல்லியம்மன் கோவில் ஆடித்தேர் திருவிழாவில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.ஆத்தூர் வசிஷ்ட தென் கரையில், கைலாசநாதர் கோவில் அருகில், குழந்தை வடிவத்தில் பெரிய மாரியம்மன், வடகரையில் செல்லியம்மன், ஐயனார், கருப்பண்ணார் ஸ்வாமி கோவில்கள் உள்ளன.விஷ காய்ச்சல், தோல் வியாதி ஏற்பட்டு பலர் உயிரிழந்ததால், குழந்தை வடிவத்தில் வந்த பெரிய மாரியம்மன், நோய்களை குணப்படுத்தியதாக, கோவில் வரலாறு கூறுகிறது. அதனால், குழந்தை பிறந்தால், கருவறையில் வைத்து, துள்ளு மாவு படையல் செய்வதை, பக்தர்கள் வழக்கமாக கொண்டுள்ளனர்."அம்மை நோய் ஏற்பட்டவர்கள், கோவிலில் தங்கி வழிபட்டால் குணமடைகின்றனர். 20க்கும் மேற்பட்ட சமுதாயத்தினர் ஒன்று சேர்ந்து, ஆடி மாதத்தில் தேர்த் திருவிழா நடத்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.கடந்த, 10 ஆண்டுக்கு பிறகு, ஆடித் தேர்த்திருவிழா நடத்த, கோவில் நிர்வாக குழுவினர் முடிவு செய்தனர்.கடந்த, ஆகஸ்ட் 5ம் தேதி, பெரிய மாரியம்மனுக்கும், 7ம் தேதி, செல்லியம்மன் ஸ்வாமிக்கும், காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது. 8ம் தேதி, திருவிளக்கு பூஜை, 15ம் தேதி, அலகு குத்துதல், உருள தண்டம் நிகழ்ச்சியும், 17ம் தேதி, நவசக்தி ஹோமமும், 18ம் தேதி, அய்யனார் திருத்தேர் நடந்தது.நேற்று, மாலை 3 மணியளவில், பெரிய மாரியம்மன் ஸ்வாமி ஆடித் தேர் திருவிழாவை, அ.தி.மு.க., கள்ளக்குறிச்சி எம்.பி., காமராஜ், துணை சேர்மன் மோகன், சேர்மன் உமாராணி, மாநில தலைமை கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.அப்போது, சிறப்பு அலங்காரத்தில் பெரியமாரியம்மன், செல்லியம்மன் ஸ்வாமிகளும், மரவள்ளி கிழங்கு, மக்காச்சோளம், பாக்கு, மாங்காய் உள்ளிட்ட காய்கனிகளுடன், திரவுபதி அம்மன் கோவில் தெரு, கடை வீதி வழியாக திருவீதி உலா வந்தது. மூலவர் பெரிய மாரியம்மன் ஸ்வாமி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.ஆத்தூர் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். ஆடித் தேர் விழாவை முன்னிட்டு, கோவில் வளாகத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது. நாளை, 22ம் தேதி, சப்தாவரணம், 23ம் தேதி, மஞ்சள் நீர், அன்னதானம், ஊஞ்சல் உற்சவ நிகழ்ச்சிகள் நடக்கிறது.