பதிவு செய்த நாள்
26
ஆக
2014
01:08
திருப்பதி : திருமலையில், வருடாந்திர பிரம்மோற்சவத்திற்கான சுவரொட்டிகள், நேற்று வெளியிடப்பட்டன. திருமலை, ஏழுமலையான் கோவில், வருடாந்திர பிரம்மோற்சவம், அடுத்த மாதம், 24ம் தேதி துவங்குகிறது. அதற்கான சுவரொட்டிகளை, நேற்று மாலை, ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களின் கவர்னர் நரசிம்மன் வெளியிட்டார். பிரம்மோற்சவத்தில் பங்கேற்க, கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு, அதிக பக்தர்கள் வருவர் என, தேவஸ்தானம் எதிர்பார்க்கிறது. அவர்களுக்கு அன்னதானம் வழங்க, காய்கறி நன்கொடையாளர்கள் மற்றும் உணவக உரிமையாளர்களுடன், தேவஸ்தான அதிகாரிகள் பேசினர். கடந்த ஆண்டு பக்தர்களுக்கு, இட்லி, வடை, பொங்கல், உப்புமா, டீ உள்ளிட்ட சிற்றுண்டி, இலவசமாக வழங்கப்பட்டது. அதே போல், இந்த ஆண்டும், சிறந்த முறையில் பக்தர்களுக்கு, சேவை செய்ய வேண்டும் என, உணவக உரிமையாளர்களிடம் அதிகாரிகள் தெரிவித்தனர். கர்நாடகா, தமிழ்நாடு. ஆந்திராவில் இருந்து பல நன்கொடையாளர்கள், கடந்த ஆண்டு, 21 வகையான காய்கறிகள் ( 91 டன்) நன்கொடை வழங்கினர். இந்த ஆண்டு கூடுதலாக, 10 டன் காய்கறிகளை, நன்கொடையாக வழங்க வேண்டும் என, நன்கொடையாளர்களிடம், தேவஸ்தான அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர்.