பதிவு செய்த நாள்
27
ஆக
2014
01:08
அரூர்: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, அரூர் அடுத்த கோபிநாதம்பட்டி கூட்ரோடு பகுதியில் விநாயகர் சிலைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. வரும், 29ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா நடக்கிறது. இதனை முன்னிட்டு, அரூர் அடுத்த கோபிநாதம்பட்டி கூட்ரோட்டில் அரை அடி உயரம் முதல், 12 அடி உயரம் வரை உள்ள விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டு, விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. 40, ரூபாய் முதல், 12 ஆயிரம் ரூபாய் வரை விலை உள்ள விநாயகர் சிலைகளை, சேலம், ஊத்தங்கரை, அனுமன்தீர்த்தம், பொம்மிடி, கோட்டப்பட்டி, பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் உள்ளிட்ட பகுதியிலிருந்து, தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து வாங்கி செல்கின்றனர்.இங்கு, வலம்புரி மற்றும் இடம்புரி விநாயகர், சிங்கம், மாடு, மான், மயில் ஆகியவற்றின் மீது, விநாயகர் அமர்ந்திருக்கும் வகையில் சிலைகள் உள்ளன. பஞ்சமுக விநாயகர் சிலையும் உள்ளது.இதுகுறித்து, சிலை வடிவமைப்பாளர் குமரேசன் கூறுகையில், தாம், கடந்த எட்டு வருடங்களாக விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிலைகளை செய்வதாகவும் இச்சிலைகள் களிமண், மரக்கூழ் பேப்பர் ஆகியவற்றை கொண்டு தயாரிக்கப்படுகிறது. சிலைகளை நீர்நிலையில் கரைக்கும் போது, எளிதில் கரைந்து விடும். அதாவது, பிளாஸ்டர் ஆப் பாரிஸ் (ஜிப்சம்) எனப்படும் ரசாயன வர்ணங்களை கொண்டு, சிலைகளை பூசுவதால் மாசுபடுகிறது. இவற்றை, தாம் பயன்படுத்துவதில்லை. தாம் பெங்களூருவில் இருந்து, டிகோ எனப்படும் கலர்களை வாங்கி வந்து சிலைகளுக்கு பயன்படுத்துவதாகவும், இதற்கு பக்தர்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது எனவும் தெரிவித்தார். ஐந்து பேரை கொண்டு விநாயகர் சிலைகள் தயார் செய்ததாகவும், இங்கு 200க்கும் மேற்பட்ட பல்வேறு வகையிலான விநாயகர் சிலைகள் உள்ளன. கடந்த, மூன்று மாதங்களுக்கு முன்பிருந்தே, விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன, என்றார்.