பதிவு செய்த நாள்
28
ஆக
2014
01:08
சென்னை : ரசாயன வர்ணம் பூசப்பட்ட, விநாயகர் சிலைகள், நீர் நிலைகளில் கரைக்க, அனுமதி இல்லை என, தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர், ஸ்கந்தன் தெரிவித்துள்ளார். அவரது அறிக்கை: சுற்றுச்சூழல் பாதுகாப்பில், தமிழகம் சிறந்த மாநிலமாக உள்ளது. சுற்றுச்சூழல் பாதுகாப்பில், மக்களுக்கும் மிகப்பெரிய கடமை உள்ளது. நீர் நிலைகள், நம் குடிநீர் ஆதாரமாக உள்ளன. நீர் நிலைகளை பாதுகாக்கும் வகையில், விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடும் போது, பின்பற்ற வேண்டிய நடைமுறைகள்: களிமண்ணால் செய்யப்பட்டது, சுடப்படாதது, எவ்வித ரசாயனக் கலவையும் அற்றது, கிழங்கு மாவு மற்றும் மரவள்ளிக் கிழங்கில் இருந்து தயாரிக்கப்பட்டது, ஜவ்வரிசி தொழிற்சாலை கழிவு போன்ற, சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப்பொருள்களால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை மட்டுமே,நீர் நிலைகளில் கரைக்க அனுமதிக்கப்படும். ரசாயன வர்ணம் பூசப்பட்ட விநாயகர் சிலைகளை, நீர் நிலைகளில் கரைக்க, அனுமதிக்கப்பட மாட்டாது. விநாயகர் சிலைகளை, மாவட்ட நிர்வாகம் குறிப்பிட்ட இடங்களில் மட்டும், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் விதிமுறைகளின்படி, கரைக்க அனுமதிக்கப்படும். மேலும் விவரங்களுக்கு, மாவட்ட கலெக்டர், போலீஸ் எஸ்.பி., மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர், ஆகியோரை அணுகலாம். இவ்வாறு, ஸ்கந்தன் தெரிவித்துள்ளார்.