பதிவு செய்த நாள்
30
ஆக
2014
10:08
நாகர்கோவில்: பத்து நாள் தொடர்ச்சியாக நடைபெறும் ஓணம் பண்டிகை கொண்டாட்டம் நேற்று துவங்கியது. இதையொட்டி, வீடுகளிலும், பொது இடங்களிலும் மலர்களால் அத்தப்பூக்களம் அமைக்கப்பட்டு வருகிறது. கேரளாவில் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகைகளில் ஒன்று திருவோணம். ’காணம் விற்றாவது ஓணம் கொண்டாடு’ என்பது பழமொழி. சிறிய தானியமான காணத்தை விற்றாவது எளிமையாக ஓணம் கொண்டாட வேண்டும் என்பதே இதன் பொருள். கேரளாவின் வசந்த விழாவாகவும் இது கொண்டாடப்படுகிறது. கேரளாவில் குறுநில மன்னனாக, வாய்மை தவறாமல் ஆட்சி செய்து வந்த மகாபலியை சோதிக்க விரும்பிய விஷ்ணு பகவான், வாமன அவதாரம் எடுத்து மன்னனிடம் சென்று 3 அடி நிலம் கேட்டார். ’தருகிறேன்’ என்று மன்னன் சொன்னதும், மலையாக வளர்ந்த விஷ்ணு முதல் அடியில் பூமியையும், 2 வது அடியில் ஆகாயத்தையும் அளந்து விட்டு, 3 வது அடிக்கு நிலம் கேட்ட போது தனது தலையை காட்டி, ’தருகிறேன்’ என சொன்ன சொல்லை காப்பாற்றினார், மகாபலி. அப்போது விஷ்ணுவிடம் கேட்டு பெற்ற வரத்தின் படி, ஆவணி திருவோண நாளில் மக்களை மகாபலி காண வருவதாக நம்பப்படுகிறது. ஆவணி அஸ்தம் நாள் முதல் 10 நாட்கள் இவ்விழா கொண்டாடப்படுகிறது. நேற்று அஸ்தம் பிறந்தை ஒட்டி பத்மனாபபுரம் அரண்மனையில் அத்தப்பூ கோலம் அமைத்து, ஓணத்தை வரவேற்றனர். ஊஞ்சல் ஆடியும், பாட்டு பாடியும் ஓண கொண்டாட்டம் துவங்கியது. இதில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் பங்கேற்றனர். இனி10 நாட்கள் கேரளாவிலும், அதை ஒட்டியுள்ள தமிழக எல்லை பகுதிகளிலும் ஓணம் களை கட்டுவதை காண முடியும். இதன் உச்சக்கட்டமாக செப்., 7 ல் திருவோணம் கொண்டாடப்படுகிறது.